தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மங்களூரு வருகை; கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு 'மஞ்சள் அலர்ட்'


தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மங்களூரு வருகை; கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்
x

கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மங்களூரு;

தென்மேற்கு பருவமழை

கர்நாடகத்தில் இந்த மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியும் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்னும் 2 நாட்களில் கர்நாடகத்தில் பருவமழை பெய்ய தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மஞ்சள் அலர்ட்

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் மழை இன்னும் சரியாக பெய்யவில்லை. இந்த ஆண்டு தென்ேமற்கு பருவமழையின் தொடக்கம் சரியாக இல்லை. ஆனால் பருவமழை பலவீனமானது என்று அர்த்தமல்ல. இன்னும் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலத்தில் மழை பெய்ய தொடங்கும். அதாவது வருகிற 14 (நாளை), 15-ந்தேதிகளில் மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும்.

மராட்டிய கடல் பகுதியில் மேலடுக்கு புயல் காரணமாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் இன்று (அதாவது நேற்று) முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.


இதனால் அந்தப்பகுதிகளில் 5 நாட்களும் 'மஞ்சள் அலர்ட்' (மஞ்சள் அலர்ட் என்பது, 6 சென்டி மீட்டர் முதல் 12 சென்டிமீட்டர் வரை கனமழை பெய்யும் என்பதை குறிப்பதாகும்) எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அரபிக்கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

கடலோர மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மங்களூருவுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்துள்ளனர். 17 பேர் கொண்ட குழுவினர் மங்களூரு அருகே பனம்பூரில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தென்மேற்கு பருவமழை முடியும் வரை அங்கு தங்கியிருப்பார்கள் என கூறப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பெல்தங்கடி, கடபா, சுள்ளியா தாலுகாக்களில் பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களில் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story