டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்து : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்


டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்து : தேசியவாத காங்கிரஸ் கடும் விமர்சனம்
x

கோப்புப்படம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மும்பை,

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. ஒரு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை விட அதிகரித்துள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்க பயணத்தில் இருக்கும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்திய பொருளாதாரம் அடிப்படையில் வலுவாக இருப்பதாகவும், உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது பணவீக்கம் இந்தியாவில் குறைவாக இருப்பதாகவும்" கூறினார். மேலும் "இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனின் கருத்து அபத்தமானது என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சயில்டு க்ராஸ்டோ வெளியிட்ட அறிக்கையில், "ரூபாயின் மதிப்பு சரியவில்லை. டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது என்ற நிர்மலா சீதாராமனின் பேச்சு அபத்தமானது. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது நமது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசு அடைந்துள்ள தோல்வியை மறைக்காது.

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிகளை வெற்றிபெறும் முயற்சிகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அவர் தனது அமைச்சகத்தை கவனிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலில் இந்திய பொருளாதாரத்தை காப்பதே நிதி மந்திரியாக அவரது முக்கிய கடமையாகும். கேலிக்கு வழி வகுக்கும் இதுபோன்ற அறிக்கைகளை நிர்மலா சீத்தாராமன் தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story