நான் பட்டிதார் சமூகத்தை சார்ந்தவன் என்பதால் பாஜக என்னை குறிவைக்கிறது - ஆம் ஆத்மி தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா என்னை மிரட்டினார் குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா பரபரப்பு குற்றச்சாட்டு
புதுடெல்லி,
குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், அவர் பிரதமர் நரேந்திர மோடி மீது தரக்குறைவான கருத்துக்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோபால் இத்தாலியாவுக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதனை தொடர்ந்து, அங்கு நேரில் ஆஜராகி இன்று விளக்கமளித்தார் இத்தாலியா. இதனை தொடர்ந்து, கோபால் இத்தாலியா டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியாவை டெல்லி போலீசார் சரிதா விஹார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி குஜராத் ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசிடம் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா கூறுகையில்:-
தேசிய மகளிர் ஆணைய எனக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதை சமூக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இன்று வரை அந்த அறிவிப்பு என் கைக்கு வரவில்லை. ஆனாலும், சட்டத்தையும் பெண்களையும் மதிப்பதல், இன்று டெல்லியில் உள்ள ஆணையத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரானேன்.
அப்போது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மாவால் நான் அச்சுறுத்தப்பட்டேன். அவர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவள் என்னை மிரட்டினார். அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததால் நான் எதற்கும் எதிர்வினை ஆற்றவில்லை. பதில் சொல்லவில்லை. ஆனால் மேடம் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். உன் அந்தஸ்து என்ன? என்று கேட்டார்.
நான் பட்டிதார் சமூகத்தை சார்ந்தவன் என்பதால் பாஜக என்னை குறிவைக்கிறது.குஜராத்தில் எனக்கு எதிராக தொடர் எப்.ஐ.ஆர்.களை பாஜக அரசு பதிவு செய்துள்ளதன் மூலம், அவர்கள் பட்டேல்களை எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. ஆனால் நான் பயப்படப் போவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.