சென்னகிரி அருகே இளம்பெண்ணை கொன்ற காட்டு யானை பிடிபட்டது
சென்னகிரி அருகே இளம் பெண்ணை கொன்ற காட்டுயானை பிடிபட்டது.
சிவமொக்கா-
சென்னகிரி அருகே இளம் பெண்ணை கொன்ற காட்டுயானை பிடிபட்டது.
காட்டுயானை தாக்கி
தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தாலுகா அமலாபுரா கிராமம் வனப்பகுதியைெயாட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுயானை ஒன்று அமலாபுரா கிராமத்திற்குள் நுழைந்தது. அங்கு தோட்டத்திற்குள் புகுந்து தோட்டத்தில் பட்டாணி பறித்து கொண்டிருந்த கவனா என்ற இளம்பெண்ணை காட்டுயானை தாக்கி கொன்றது. மேலும் அவரது தாய் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கிராம மக்கள் காட்டுயானையை பிடிக்ககோரி வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் காட்டுயானையை பிடிக்க சிவமொக்கா சக்ரேபைலு யானைகள் பயிற்சி முகாமில் இருந்து 3 கும்கி யானைகள் வரவழைக்கபட்டது.
வனத்துறை மற்றும் கால் நடை டாக்டர்கள் ஆகியோர், கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இளம்பெண்ணை கொன்ற காட்டுயானை நியாமதி தாலுகா கெஞ்சிகொப்பா ஜாலி ஒசூர் பகுதியில் சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் போில் சம்பவ இடத்திற்கு வனத்துறை மற்றும் கால்நடை டாக்டர்கள், கும்கி யானைகளுடன் சென்றனர்.
மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
அங்கு காட்டுயானை நிற்பது தெரியவந்தது. கும்கி யானைகள் உதவியுடன் காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் காட்டு யானையை பிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் கால்நடை மருத்துவர் உதவியுடன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி காட்டுயானையை பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை காட்டுயானைக்கு செலுத்த முயன்றனர். ஆனார் அதற்குள் காட்டு யானை அங்கிருந்து ஓடியது. பின்னர் வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதையடுத்து காட்டுயானையை அங்கி்ருந்து லாரியில் ஏற்றி சென்றனர்.