மைசூரு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் சாவு
மைசூரு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மைசூரு-
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் (வயது23). இவர் மைசூரு டவுன் பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சுனிலுடன் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிரந்த் (23) என்பவரும் படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் தங்கும் விடுதியில் தங்கி இருந்து கல்லூரி சென்று வந்தனர். இந்தநிலையில் சுனில், சிரந்த் ஆகியோர் சுற்றுலா செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆர்.எஸ். அணையை சுற்றி பார்க்க சென்றனர். பின்னர் அங்கிருந்து மைசூரு மாவட்டம் இளவாலா பகுதிக்கு அவர்கள் சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது சுனில் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த சிரந்த், அவரை காப்பாற்ற சென்றார். இதில் அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த இளவாலா போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவிரி ஆற்றில் குதித்து, சுனில், சிரந்த் ஆகிய 2 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.