சொரப் அருகே 1½ வயது மகளை கொன்றுஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை


சொரப் அருகே 1½ வயது மகளை கொன்றுஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சொரப் அருகே 1½ வயது மகளை கொன்றுவிட்டு ஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார்.

சிவமொக்கா-

சொரப் அருகே 1½ வயது மகளை கொன்றுவிட்டு ஏரியில் குதித்து கர்ப்பிணி தற்கொலை செய்துகொண்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாததால் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பால் கொடுக்க முடியாததால்...

சிவமொக்கா மாவட்டம் சொரப் தாலுகா குப்பேகுட்டே கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 28). இவருக்கு ஜட்டேஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1½ வயதில் மங்கள கவுரி என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் சாந்தா மீண்டும் கர்ப்பமானார். இதனால் அவர் பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் சாந்தா தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டினார்.

ஆனால் அவருக்கு பால் சுரக்கவில்லை என தெரிகிறது. இதனால் சாந்தா மனவேதனையில் இருந்தார். இதுகுறித்து சாந்தா அவரது தாயிடம் கூறி அழுது உள்ளார். இதுபற்றி கணவரிடமும் கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தாவும், அவரது மங்கள கவுரியும் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் 2 பேரையும் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

கொலை-தற்கொலை

இதையடுத்து குப்பேகுட்டே கிராமம் அருகே உள்ள ஏரியில் சாந்தா மற்றும் மங்கள கவுரியின் காலணிகள் கிடந்தது. இதுகுறித்து உடனே உறவினர்கள் ஆனவட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். தீயணைப்பு படையினர் ஏரியில் 2 பேரின் உடல்களையும் தேடினர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு சாந்தா மற்றும் மங்கள கவுரியின் உடல் ஏரியில் மீட்கப்பட்டது.

பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாத ஏக்கத்தில் 1½ வயது மகளை ஏரியில் வீசி கொன்றுவிட்டு, சாந்தாவும் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story