பள்ளி பாடப்புத்தகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி வேண்டும்- அரசுக்கு பெங்களூரு போலீஸ் சிபாரிசு


பள்ளி பாடப்புத்தகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றி வேண்டும்- அரசுக்கு பெங்களூரு போலீஸ் சிபாரிசு
x
தினத்தந்தி 26 Jun 2023 6:45 PM GMT (Updated: 26 Jun 2023 6:46 PM GMT)

கர்நாடக பள்ளி பாடப்புத்தகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பாடத்தை சேர்க்க பெங்களூரு போலீசார் அரசுக்கு சிபாரிசு செய்ய முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு, ஜூன்.27-

பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதற்கு எதிராக போலீசார் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்காக நகரில் அடிக்கடி சிறப்பு சோதனைகளும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச போதைப்பொருட்கள் எதிர்ப்பு தினத்தையொட்டி பெங்களூருவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு போலீசார் சென்று மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் பிரச்சினைகள், மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

பொதுமக்களுக்கு சான்றிதழ்

போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் போலீசாருக்கு தேவையாகும். போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் பயன்படுத்துவோர் பற்றி புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால், போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க முடியும்.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்வதுடன், நிறுத்தாமல், அவர்களுக்கு எதிராக கோர்ட்டிலும் உரிய சாட்சி ஆதாரங்களை அளித்து தண்டனை பெற்றுக் கொடுக்கவும் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் ஒழிப்பு பற்றி பாடம்

பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்த் நிருபர்களிடம் கூறுகையில், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பள்ளி பாடபுத்தகங்களில், அதுபற்றிய பாடத்தை சேர்க்க தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.

போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினால், அதுபற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள முடியும். பள்ளி பாடப்புத்தகங்ககளில் போதைப்பொருட்கள் ஒழிப்பு பற்றிய பாடத்தை சேர்ப்பது குறித்து அரசுக்கு சிபாரிசு செய்யப்படும், என்றார்.

இவ்வாறு தயானந்த் கூறினார்.

பேட்டியின் போது மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உடன் இருந்தார்.


Next Story