நியூசிலாந்து பிரதமர் போன்ற தலைவர்கள் தேவை: இந்திய அரசியலை சாடிய காங்கிரஸ் தலைவர்


நியூசிலாந்து பிரதமர் போன்ற தலைவர்கள் தேவை: இந்திய அரசியலை சாடிய காங்கிரஸ் தலைவர்
x

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா வரும் பிப்ரவரி 7-ந்தேதி பதவியில் இருந்து விலகும் முடிவை அறிவித்து உள்ளார்.


புதுடெல்லி,


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்திய அரசியலில் ஜெசிந்தா ஆர்டென் போன்ற தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், கிரிக்கெட் வர்ணனையாளர்களில் ஜாம்பவானான விஜய் மெர்ச்சன்ட், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பு பற்றி முன்பொரு முறை கூறும்போது, ஏன் இன்னும் போகவில்லை? என கேட்கும் வரை இருக்காமல், ஏன் அவர் போகிறார்? என்று மக்கள் கேட்கும்போதே போய் விட வேண்டும் என கூறினார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், மெர்ச்சன்டின் கூற்றை பின்பற்றி பதவி விலகுகிறேன் என கூறியுள்ளார். இந்திய அரசியலுக்கு அவரை போன்ற பலர் தேவை என தெரிவித்து உள்ளார்.

நியூசிலாந்து பிரதமராக உள்ள ஜெசிந்தா ஆர்டென் வருகிற பிப்ரவரி 7-ந்தேதியே பிரதமராக பதவி வகிக்கும் தனது கடைசி நாளாக இருக்கும். மறுதேர்தலை கோரமாட்டேன் என்று கூறியுள்ளார்.

அடுத்த பொது தேர்தல் நடப்பு ஆண்டின் அக்டோபர் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அவர் ஊடகத்திடம் அளித்த பேட்டியின்போது கூறினார். இதன் வழியே பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை அவர் அறிவித்து உள்ளார்.

சுதந்திரா தொழிலாளர் கட்சியை சேர்ந்த ஆர்டென் பிரதமராக ஐந்தரை ஆண்டுகளாக பதவி வகித்ததுடன், கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நாட்டை திறமையாக வழி நடத்தி சென்றதில் அவருடைய பணி பெரும் பங்கு வகிக்கின்றது.

37 வயதில் நாட்டின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த இளம் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர்களில் ஆர்டெனும் ஒருவர். அவர் பதவியில் இருக்கும்போதே குழந்தையையும் பெற்றெடுத்தவர்களில் ஒருவர் என்பதும் நினைவுகூரத்தக்கது.


Next Story