நீட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது? - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ்நாட்டில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்ததில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர்.
இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் இளநிலை தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வரும் 30-ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.