ராகுல் காந்தி மீது உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்


ராகுல் காந்தி மீது உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் கடும் விமர்சனம்
x

ராகுல்காந்தி வீரசாவர்க்கருக்கு எதிராக பேசி இந்திய ஒற்றுமை நடைபயணம் மூலம்கிடைத்த நேர்மறை சக்தியை சிதைத்துவிட்டார் என சஞ்சய்ராவத் கூறியுள்ளார்.

மும்பை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாட்டின் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டு வரும், அவர் கடந்த 7-ந் தேதி முதல் மராட்டியத்தில் உள்ளார். இதில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீரசாவர்க்கர் பற்றி கடுமையாக பேசினார். வீரசாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்காக வேலை பார்த்தவர், அவர்களிடம் இருந்து ஓய்வூதியம் வாங்கியவர், காந்தி, நேரு போன்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு துரோகம் செய்தவர் என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் பேச்சுக்கு பா.ஜனதா, சிவசேனா கட்சியின் 2 அணிகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்தநிலையில் வீரசாவர்க்கர் குறித்து ராகுல்காந்தி பேசியது தொடர்பாக சஞ்சய் ராவத் சாம்னாவில் கூறியிருப்பதாவது:- நான் 3 மாதங்கள் ஜெயிலில் இருந்தேன். பல சுதந்திர போராட்ட வீரர்கள் ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயிலில் அதற்கான நினைவிடம் உள்ளது. சாதாரண கைதி, ஒரு நாளை ஜெயிலில் கழிப்பதே கடினம். சாவர்க்கர் 10 ஆண்டுகளுக்கு மேலாக அந்தமான் தனிமை ஜெயிலில் இருந்து இருக்கிறார். அப்போது அவர் சந்தித்த துயரங்கள் ஏராளம். ஆங்கிலேய அரசு அவரை பொய் பணப்பரிமாற்ற வழக்கில் கைதுசெய்யவில்லை. ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஆயுத புரட்சியை தொடங்கியதால் அவரை கைது செய்து அந்தமான் ஜெயிலில் அடைத்தனர். சாவர்க்கர் ஜெயிலில் இருந்து வெளியே வர கையாண்ட யுக்தி தான் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கடிதம். அது மன்னிப்பு கடிதம் என தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் சாவர்க்கரை விமர்சிப்பது அல்ல. சாவர்க்கருக்கு எதிராக பேசியதால், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் கிடைத்த நேர்மறை சக்தி, நம்பிக்கையை சிதைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story