விமான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை சிவில் விமான போக்குவரத்து மந்திரி தகவல்

ரெயில் பயணத்தைப் போல விமான பயணத்தையும் எளிதாக ஆக்க விரும்புகிறேன் என்று சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய மந்திரிகளாக நியமனம் பெற்றவர்கள் பொறுப்பேற்று வருகிறார்கள். இந்த நிலையில் சிவில் விமான போக்குவரத்து மந்திரி ராம் மோகன் நாயுடு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது-
நான் செல்லும் இடங்களில் எல்லாம் விமான கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதை கேட்க முடிகிறது. கொரோனாவுக்கு பிறகு மிகவும் அதிகரித்து இருப்பதாக கூறுகிறார்கள். விமான பயணத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதே அரசின் நோக்கம். மலிவு விலையில் கட்டணம் இருந்தால் மட்டுமே அதை அடைய முடியும். தற்போது சாமானியர்களுக்கு சவாலாக கட்டணம் உள்ளது.
இதில் உள்ள பிரச்சினைகள் பற்றி நான் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக ஆய்வுக்கூட்டங்களை நடத்தப் போகிறேன். இலக்குகளை அடைய 100 நாள் செயல்திட்டம் வகுக்கப்படும். ரெயில் பயணத்தைப் போல விமான பயணத்தையும் எளிதாக ஆக்க விரும்புகிறேன். இதில் தீர்வு காண அரசு உறுதி பூண்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






