ராஜஸ்தானில் புதிய முதல்-மந்திரி விவகாரம்: சச்சின் பைலட் மீது அசோக் கெலாட் தாக்கு
புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அசோக் கெலாட் மறைமுகமாக சாடியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்தார். இதனால் ராஜஸ்தான் முதல்-மந்திரியாக தற்போதைய துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 90 பேர் பதவி விலக முடிவு செய்தனர். இதனால் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்படவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து அசோக் கெலாட் பின்வாங்கினார்.
இந்த நிலையில் புதிய முதல்-மந்திரி விவகாரத்தில் சச்சின் பைலட் மீது அவர் மறைமுகமாக சாடியுள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'ஒரு முதல்-மந்திரி மாற்றப்படும்போது 80 முதல் 90 எம்.எல்.ஏ.க்கள் அணி மாற முன்வந்திருக்கின்றனர். அவர்கள் புதிய முதல்-மந்திரிக்கு எதிராக திரும்பியுள்ளனர். இது தவறு என நானும் நினைக்கவில்லை. ஆனால் ஒரு புதிய முதல்-மந்திரியின் பெயரை கேட்டதுமே எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ராஜஸ்தானில் இது முதல்முறை' என சச்சின் பைலட் பெயரை குறிப்பிடாமல் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் முதல்-மந்திரி மாற்றம் நிகழுமா? என்ற கேள்விக்கு, 'அது குறித்து கட்சித்தலைமைதான் முடிவு எடுக்கும், நான் எனது பணிகளை செய்கிறேன்' என்று பதிலளித்தார்.