கர்நாடக மாநில லோக் அயுக்தா புதிய நீதிபதியாக பி.எஸ்.பட்டீல் நியமனம்


கர்நாடக மாநில லோக் அயுக்தா புதிய நீதிபதியாக பி.எஸ்.பட்டீல் நியமனம்
x

கர்நாடக லோக் அயுக்தா புதிய நீதிபதியாக பி.எஸ்.பட்டீலை நியமித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெங்களூரு

கர்நாடக லோக் அயுக்தா புதிய நீதிபதியாக பி.எஸ்.பட்டீலை நியமித்து கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதியாக பி.எஸ்.பட்டீல் நியமனம்

கர்நாடக லோக் அயுக்தா நீதிபதியாக இருந்தவர் விஸ்வநாத் ஷெட்டி. இவர், கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, லோக் அயுக்தாவுக்கு புதிய நீதிபதி நியமிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, லோக் அயுக்தாவுக்கு புதிய நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லோக் அயுக்தாவுக்கு விரைவில் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.

இதன் காரணமாக லோக் அயுக்தா நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், அதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கடந்த வாரம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கர்நாடக மாநில லோக் அயுக்தா புதிய நீதிபதியாக பீமண்ணகவுடா சங்கண்ணகவுடா பட்டீல் (பி.எஸ்.பட்டீல்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று பிறப்பித்துள்ளார்.

உப லோக் அயுக்தா நீதிபதியாக...

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் சிபாரிசின் பெயரில் புதிய நீதிபதியை நியமித்து கவர்னர் உத்தரவிட்டுள்ளார். லோக் அயுக்தா புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ள பி.எஸ்.பட்டீல், உப லோக் அயுக்தா நீதிபதியாக இருந்து வந்தார். அவரையே புதிய நீதிபதியாக நியமித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி கடந்த 2018-ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றிருந்தார்.

பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா, உப லோக் அயுக்தா நீதிபதியாக பி.எஸ்.பட்டீலை நியமித்து இருந்தார். பி.எஸ்.பட்டீல், கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக 14 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story