கர்நாடகத்தில் இனி ஆண்டுதோறும் புதிய ஆசிரியர்கள் நியமனம; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு


கர்நாடகத்தில் இனி ஆண்டுதோறும் புதிய ஆசிரியர்கள் நியமனம;   முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
x

கர்நாடகத்தில் இனி ஆண்டுதோறும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு:

வகுப்பறைகள்

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ.19 ஆயிரம் கோடி செலவழிக்கப்படுகிறது. பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி மட்டும் பயன்படுத்த முடிகிறது. ஒரே ஆண்டில் 8 ஆயிரத்து 101 வகுப்பறைகளை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கர்நாடக வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகும்.

அங்கன்வாடி மையங்கள்

மொத்தம் 23 ஆயிரம் கோடி பள்ளி வகுப்பறைகளை அமைக்க வேண்டியுள்ளது. படிப்படியாக இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நல்ல பள்ளிகள் இருந்தாலும் நல்ல வகுப்பறைகள் இல்லாததால் அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளது. அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தனித்தனியாக கழிவறைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இந்த பணிகள் செய்து முடிக்கப்படும். மாநிலத்தில் புதிதாக 4 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள் அடுத்த ஓராண்டில் தொடங்கப்படும். புதிதாக 15 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், பள்ளி கட்டிடங்களை சிறப்பான முறையில் பராமரிக்கும் நோக்கத்தில் மத்திய-மாநில அரசுகள் வழிகாட்டுதலை வகுத்துள்ளது.

தரமான கல்வி

இவற்றை பள்ளி நிர்வாகங்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதிகள் நீக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஆசிரியர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்யும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியம். எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் பள்ளிகளை திறக்க அதிகாரிகள் அனுமதி வழங்குவதை அரசு கவனித்து வருகிறது.

இதனால் குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்காது. அரசின் உத்தரவுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள பள்ளிகளின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். வரலாற்றை உருவாக்கும் கல்வித்துறையை மேம்படுத்துவதில் எந்த விதமான சமரசத்திற்கும் இடம் இல்லை.

பாடம் கற்கிறோம்

ஆசிரியர்கள் இல்லாமல் கல்வியை நினைத்து கூட பார்க்க முடியாது. மனித சமூக வளர்ச்சியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. அறிவாற்றலின் குருக்களாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். பல்வேறு துறைகளிலும் குருக்கள் உள்ளனர். நமது வாழ்க்கை எல்லாவற்றையும் விட பெரிய குரு. வாழ்க்கையில் கற்கும் ஒவ்வொரு விஷயத்தையும் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிலையிலும் நாம் கற்று கொண்டிருக்கிறோம். வாழ்க்கை முதலில் பரீட்சை நடத்துகிறது. அதன் பிறகு அதன் முடிவு கிடைக்கிறது. வாழ்க்கை அனுபவத்தில் இருந்து நாம் பாடம் கற்கிறோம். கர்நாடகத்தில் இனி ஆண்டுதோறும் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இணையாக புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இதில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் உள்பட அத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story