ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x
தினத்தந்தி 18 May 2022 9:22 PM GMT (Updated: 2022-05-19T10:49:54+05:30)

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனை சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட்டு நேற்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலை படை மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன்

இந்த கொலை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர்கள் 7 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அனைத்தும் வெற்றி பெறவில்லை.

இதற்கிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பினார். இந்த நிலையில் பேரறிவாளன் பரோலில் வெளியே வந்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டில் மனு

இதற்கிடையே தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், தன்னை விடுதலை செய்யக்கோரியும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது 'பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே முடிவு எடுப்போம்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதன் பின்னர் கடந்த 11-ந் தேதி நடந்த விசாரணையின்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் ஆஜராகி, 'ஒரு சிக்கலான சூழலில் அமைச்சரவையின் கோப்பை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க அதிகாரம் உள்ளது' என வாதிட்டார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'கருணை மனு மீது மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கான அதிகாரத்திற்கும், கவர்னர் எடுக்கும் முடிவுக்கான அதிகாரத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் குற்றவாளிகளின் கருணை மனுவை கவர்னர் பரிசீலிப்பது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானதா?.

கொலை குற்ற வழக்குகளில் தண்டனை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளதா? அப்படி என்றால் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களின் கருணை மனுக்கள் எல்லாம் என்னவாகும்? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கும்போது, அவற்றின் மீது மத்திய அரசுக்கு நிர்வாக அதிகாரம் இருக்காது அல்லவா? என நீதிபதிகள் கேட்டபோது, அதிகாரம் இருக்காது என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் கவர்னர்

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், 'உங்கள் வாதங்களை ஏற்றால், கருணை மனு மீது முடிவு எடுக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என பொருள் கொள்ள வேண்டியுள்ளது. அமைச்சரவையின் முடிவுகள் தவறு என்றால் அதை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க முடியுமா?.

உங்களின் வாதங்களை ஏற்றால் அமைச்சரவை முடிவுகள் அனைத்தையும் கவர்னர் ரத்து செய்ய முடியும். அமைச்சரவையின் முடிவுகளை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அதற்கு கட்டுப்பட்டவர்தான் கவர்னர்' என்றனர்.

பின்னர் தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ராகேஷ் துவிவேதி ஆஜராகி வாதாடினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

இதற்கிடையே பேரறிவாளன் சார்பில் வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு சுப்பிரமணியன், பாரிவேந்தன் ஆகியோர் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

சுயமாக முடிவு

அமைச்சரவையின் ஆலோசனையின்படியே கவர்னர் செயலாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன்படி கருணை மனு மீதான முடிவையும் அமைச்சரவையின் பரிந்துரையின் அடிப்படையிலேயே கவர்னர் எடுக்க வேண்டும்.

கருணை மனு மீதான கவர்னரின் அதிகாரம், தண்டனையை குறைக்கும் கவர்னரின் அதிகாரம் ஆகியவற்றின் கீழ் கவர்னர் கருணை மனுவை ஏற்பதோ அல்லது நிராகரிப்பது குறித்தோ சுயமாக முடிவு எடுக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு மருராம், ஸ்ரீஹரன் வழக்குகளில் தீர்ப்பு கூறியுள்ளது.

அரசியலமைப்பு சாசனம் 161-வது பிரிவின் அதிகாரத்தை கவர்னர் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு எதிராக வழக்கு தொடரலாம் என சுப்ரீம் கோர்ட்டு எப்ரூ சுதாகர் வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.

இதன்படி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுவிக்கும் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, பேரறிவாளனை கவர்னர் விடுவிக்க வேண்டும். இதை தவிர்த்து இந்த விவகாரத்தில் சுயமாக முடிவு எடுக்கவும், கோப்பை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கவும் கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

பேரறிவாளன் கவர்னருக்கு அனுப்பி வைத்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததில் எவ்வித சட்ட வரம்பும் இல்லை. கருணை மனுவை ஒவ்வொருமுறையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றால், மாநில கவர்னர்களால் இதுவரை கருணை மனு மீதான எடுத்த முடிவுகள் அரசியலமைப்பு சாசனத்திற்கு முரணாகவும், செல்லாமலும் போகும்.

29 ஆண்டுகள் சிறையில் இருந்த ராம் சேவக், 28 ஆண்டுகள் சிறையில் இருந்த ஷோர், 16 ஆண்டுகள் சிறையில் இருந்த சதீஷ், 17 ஆண்டுகள் சிறையில் இருந்த நிலோபர் நிஷா உள்ளிட்டோரை சுப்ரீம் கோர்ட்டே அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142-வது பிரிவின் கீழ் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்ததைபோல தன்னையும் விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பேரறிவாளன் விடுதலை

இந்த நிலையில் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு கூறியது.

அதன்படி 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு கூறினர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:-

2½ ஆண்டுகள் தாமதம்

மாநில அரசின் அறிவுரைக்கு கட்டுப்பட்டே அரசியலமைப்பு சாசனத்தின் 161-வது அதிகாரத்தை கவர்னர் செயல்படுத்த முடியும். இதை இந்த கோர்ட்டு பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகள் உறுதி செய்கின்றன.

ஒரு சிறைக்கைதியை விடுவிக்க அமைச்சரவை முடிவு எடுத்து அதை கவர்னருக்கு பரிந்துரைக்கும்போது, அரசியலமைப்பு சாசனத்தின் 161-வது அதிகாரத்தை கவர்னர் செயல்படுத்தாமல் இருந்தாலோ, விவரிக்க முடியாத கால தாமதம் செய்தாலோ அவற்றை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியும்.

தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கவர்னர் 2½ ஆண்டுகள் தாமதம் செய்து ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பி இருப்பது அரசியலமைப்பு சட்டம் ஏற்கவும் இல்லை. அதற்கு முரணாக அமைந்துள்ளது.

மாநில அரசுக்கு அதிகாரம்

கொலை வழக்குகளில் தண்டனையை குறைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்ற வாதம் தவறானது. மேலும் கொலை வழக்குகளில் தண்டனையை குறைக்கும் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசுக்கு அரசியலமைப்பு சட்டத்திலோ, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட வேறு சட்டத்திலோ வழங்கப்படவில்லை. இந்த வழக்குகளில் முடிவு செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

நீண்டகால சிறைவாசத்தின்போதும், பரோல் காலத்திலும் பேரறிவாளனின் நடத்தை திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதையும், உடல் உபாதைகளையும், சிறை வாசத்தின்போது பெற்ற கல்வித்தகுதியையும், தண்டனை குறைப்பு மனு, அது தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை 2½ ஆண்டு காலம் நிலுவையில் வைக்கப்பட்டதையும் கருத்தில் கொள்ளும்போது, இந்த விவகாரத்தை கவர்னருக்கு மீண்டும் திருப்பி அனுப்புவதை கோர்ட்டு பரிசீலிக்கவில்லை.

விடுவிப்பு

அரசியலமைப்பு சாசன 142-வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, ஜாமீனில் உள்ள பேரறிவாளனை ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையில் இருந்து உடனடியாக விடுவிக்கிறோம். அவருடைய ஜாமீன் ஆவணங்கள் ரத்து செய்யப்படுகின்றன. மேல்முறையீட்டு மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தலைவர்கள் வரவேற்பு

31 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வரவேற்று உள்ளனர்.

பேரறிவாளனின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் இனிப்பு வழங்கி விடுதலையை கொண்டாடி மகிழ்ந்தனர்.


Next Story