பெங்களூருவில் நடுரோட்டில் தனியார் பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை-வீடியோ வெளியாகி பரபரப்பு


பெங்களூருவில் நடுரோட்டில் தனியார் பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை-வீடியோ வெளியாகி பரபரப்பு
x
தினத்தந்தி 19 May 2022 4:04 AM IST (Updated: 19 May 2022 4:19 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடுரோட்டில் தனியார் பள்ளிகளின் மாணவிகள் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரு:பெங்களூருவில் நடுரோட்டில் தனியார் பள்ளிகளின் மாணவிகள் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகள் இடையே மோதல்

பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 தனியார் பள்ளிகள் உள்ளன. 2 பள்ளிகளும் அருகருகே அமைந்துள்ளது. இந்த நிலையில், 2 பள்ளிகளின் மாணவிகளும் திடீரென்று நடுரோட்டில் வைத்து மோதிக் கொண்டனர். அதாவது மாணவிகள், ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். சில மாணவிகள், மற்றொரு பள்ளியின் மாணவிகளின் குடுமியை பிடித்து இழுத்து சண்டை போட்டனர்.

மாணவிகள் நடுரோட்டில் மோதிக் கொள்வதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், 2 பள்ளிகளின் மாணவிகளும் நடுரோட்டில் வைத்து மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

சமூக வலைதளத்தில் கருத்துப்பதிவு...

மாணவிகள் மோதல் பற்றியோ, சண்டையில் காயம் அடைந்த மாணவிகளோ கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதை தொடர்ந்து சுதாரித்து கொண்ட கப்பன்பார்க் போலீசார், 2 பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சண்டையில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக 2 பள்ளிகளின் நிர்வாகிகளும் போலீசாரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் 2 பள்ளிகளின் மாணவிகளும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிடுவது தொடர்பாக மோதல் ஏற்பட்டு, நடுரோட்டில் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் காதல் விவகாரத்திலும் சண்டை ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. அதுகுறித்து கப்பன்பார்க் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story