கோட்டை மீறி வர கூடாது... நானும் மீறமாட்டேன்; வைரலாகும் வீடியோ


கோட்டை மீறி வர கூடாது... நானும் மீறமாட்டேன்; வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 20 May 2022 4:29 PM IST (Updated: 20 May 2022 4:30 PM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கும் மானின் வீடியோ வைரலாகி வருகிறது.

வாரணாசி,

நாட்டில் சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கும்படி போக்குவரத்து போலீசாரால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் பொதுமக்களில் சிலர் அதனை சரிவர கண்டு கொள்வதில்லை. இதனால், அவர்களுக்கும் துன்பம் நேரிடுகிறது. சுற்றியிருப்பவர்களுக்கும் தொல்லை ஏற்படுகிறது.

இந்த நிலையில், சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக புது யுக்தியை உத்தர பிரதேச போலீசார் கையாண்டுள்ளனர்.

இதன்படி, அவர்கள் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மான் ஒன்று ஜீப்ரா கிராசிங்குக்கு இந்த பக்கம் நிற்கிறது.

ஜீப்ரா என்றால் ஆங்கிலத்தில் வரி குதிரையை குறிக்கிறது. அதன் உடலில் காணப்படும் வெள்ளை மற்றும் கருப்பு நிற கோடுகளை போன்று சாலையில் மக்கள் நடந்து செல்லும் பகுதியை வேறுபடுத்தி காட்டுவதற்காக இந்த ஜீப்ரா கிராசிங் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த மான், சிவப்பு நிற விளக்கு எரிந்த பின் வாகனங்கள் நின்றதற்கு பின்பு, ஜீப்ரா கிராசிங் வழியே முறையாக சாலையை கடந்து மறுபுறம் செல்கிறது.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள போலீசார், வாழ்க்கை விலைமதிப்பற்து. போக்குவரத்து விதிகளை மீறும்போது வாழ்க்கை விலையுயர்ந்தது என்பது நிரூபிக்கப்படுகிறது. அதனால் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடியுங்கள் என அதற்கு தலைப்பிட்டு உள்ளனர்.

இதனை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு உள்ளனர். சாலை பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கும்படி மக்களை வலியுறுத்துவதற்கு காவல் துறை மேற்கொண்ட புதிய முயற்சியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி உள்ளனர்.

சாலை பாதுகாப்பு விதியை மான் கூட பின்பற்றுகிறது. நாம் மனிதர்கள். ஏன் அவற்றை நாம் பின்பற்ற கூடாது? தயவு செய்து சாலை பாதுகாப்பினை பின்பற்றவும். எப்பொழுதும் பாதுகாப்புடன் பயணம் செய்யவும் என்று ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று மற்றொரு நபர், இந்த பகுதியானது வாரணாசியில் சிக்ரா என்ற இடத்தில் உள்ளது என தெரிவித்து உள்ளார். வாகனங்கள் ஜீப்ரா கிராசிங்கை மதிப்பதில்லை. அதனை மதிக்க போலீசார் அவர்களை கட்டாயப்படுத்த வேண்டும் என தெரிவித்து உள்ளார்.




Next Story