அடுத்த முதல்-மந்திரி போஸ்டரால் பரபரப்பு; சித்தராமையாவுடன் மோதல் போக்கா...? டி.கே. சிவக்குமார் பேட்டி


அடுத்த முதல்-மந்திரி போஸ்டரால் பரபரப்பு; சித்தராமையாவுடன் மோதல் போக்கா...? டி.கே. சிவக்குமார் பேட்டி
x

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆதரவாளர்களின் போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெங்களூரு,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் முடிவில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது. 137 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க. 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது. இதனால், தேர்தலில் பா.ஜ.க. தேல்வி அடைந்து உள்ளது.

36 ஆண்டுகளுக்கு பின்னர் 137 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் பிரதேச கமிட்டி தலைவரான டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்று உள்ளார்.

இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி. சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று உள்ளார்.

இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் நடைபெறும் கூட்டத்தில், முதல்-மந்திரி வேட்பாளர் பற்றிய அவர்களின் கருத்துகளை, கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேட்டு பெறுவார் என கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி, கர்நாடகாவில் அரசமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்கள், கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி என இருவரின் போஸ்டர்களை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினர்.

இதனால், காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் ஏற்பட கூடிய சூழல் உருவானது. இந்த நிலையில், டி.கே. சிவக்குமார் தும்கூரு நகரில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இன்று பேசும்போது, எனக்கு சித்தராமையாவுடன் கருத்து வேற்றுமைகள் உள்ளன என சிலர் கூறி வருகின்றனர். எங்களுக்குள் எந்தவித வேற்றுமைகளும் கிடையாது என அவர் கூறியுள்ளார்.

கட்சிக்காக பலமுறை நான் தியாகம் செய்திருக்கிறேன். கடந்த காலத்தில், தியாகம் செய்து, உதவி செய்து, சித்தராமையாவுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறேன். தொடக்கத்தில் என்னை மந்திரியாக ஆக்காதபோது நான் பொறுமையாக இருக்கவில்லையா? என கேள்வி எழுப்பிய சிவக்குமார், சித்தராமையாவுக்கு நான் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறேன் என கூறியுள்ளார்.


Next Story