நிக்கி யாதவ் வழக்கு: காதலரின் தந்தை மற்றொரு கொலை வழக்கில் முன்னாள் குற்றவாளி; போலீசார் திடுக் தகவல்


நிக்கி யாதவ் வழக்கு:  காதலரின் தந்தை மற்றொரு கொலை வழக்கில் முன்னாள் குற்றவாளி; போலீசார் திடுக் தகவல்
x

2-வது திருமணத்தின்போது, குடும்பத்திற்கு அவமதிப்பு செய்து விடாமல் இருக்க நிக்கியை ‘அமைதிப்படுத்தும்படி’ சாஹிலிடம் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.



புதுடெல்லி,


டெல்லியின் நஜாப்கார் நகரில் மித்ராவன் கிராமப்புறத்தில் சாலையோர பகுதியில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இதில் உள்ள பிரீசரில், 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட பெண் அரியானாவை சேர்ந்த நிக்கி யாதவ் (வயது 25) என தெரிய வந்தது. சாஹில் கெலாட் என்பவருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இதன்பின்னர் கொரோனா பெருந்தொற்று பரவலின்போது, கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நொய்டா நகரில் கோவில் ஒன்றில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். எனினும், இந்த திருமணம் பற்றி அறிந்த சாஹிலின் குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்து உள்ளனர்.

இந்நிலையில், சாஹிலுக்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த நிக்கி யாதவ், சாஹிலிடம் வாக்குவாதம் செய்து உள்ளார். 2-வது திருமணத்தின்போது, அவற்றை வெளிப்படுத்தி விடுவேன் என கூறி சண்டை போட்டு உள்ளார்.

இதனால், நிக்கியை 'அமைதிப்படுத்தும்படி' சாஹில் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 2-வது திருமணத்தின்போது, குடும்பத்திற்கு அவமதிப்பு ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக நிக்கியின் சாப்டரை முடித்து விடும்படி கூறியுள்ளனர்.

இதன்பின் நிக்கியின் வீட்டுக்கு இரவில் சென்ற சாஹில், தங்கி விட்டு அடுத்த நாள் காலையில் டெல்லியில் பல இடங்களுக்கு நிக்கியை அழைத்து சென்று உள்ளார். அப்போது, 2-வது திருமண விவரம் பற்றி நிக்கி சண்டை போட்டு உள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த சாஹில் போன் சார்ஜருக்கு பயன்படும் கேபிளை பயன்படுத்தி, நிக்கியின் கழுத்தில் இறுக்கி அவரை கொலை செய்து உள்ளார். அவரது உடலை காரில் கொண்டு சென்று, உணவு விடுதியில் உள்ள பிரிட்ஜில் மறைத்து வைத்து உள்ளார்.

போலீசாரின் விசாரணையின்படி, கடந்த 9-ந்தேதி இரவில் இருவரும் சந்தித்து உள்ளனர். அதன்பின் 10-ந்தேதி காலை 9.30 மணியில் இருந்து 10.30 மணிக்குள் காரில் வைத்து, நிக்கி கொல்லப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில், சாஹில் மற்றும் நிக்கி இடையேயான கோவிலில் வைத்து திருமணம் நடந்ததற்கான சான்றிதழ்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். நிக்கியின் உடலை பிரிட்ஜுக்குள் மறைத்து வைக்க சாஹிலின் நண்பர் மற்றும் உறவினர் உதவி உள்ளனர்.

நிக்கி கொலை சம்பவத்திற்கு பின் அவரது போனில் உள்ள சாட்டிங், வாட்ஸ்அப் உரையாடல்கள் உள்ளிட்ட பிற விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அது சாஹிலுக்கு எதிராக மிக பெரிய சான்றாக போலீசாருக்கு கிடைக்கும் என அறிந்தே சாஹில், அவற்றை அழித்து உள்ளார்.

அதன்பின், நிக்கியின் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, சிம்மையும் எடுத்து கொண்டார். அவற்றை போலீசார் சாஹிலிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த காஷ்மீரி கேட் பகுதிக்கு சாஹிலை அழைத்து சென்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தவிர, நிக்கியை அழைத்து சென்ற டெல்லியின் நிஜாமுதீன், ஆனந்த் விகார் ரெயில்வே நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சாஹிலை அழைத்து சென்று, சம்பவம் நடந்த நேரம், காரணம் உள்ளிட்ட முழு, தொடர் விவரங்களை அறியும் முயற்சியில் ஈடுபட போலீசார் முடிவு செய்தனர்.

கடந்த வாரம் புதன்கிழமை போலீசார் கைப்பற்றிய சி.சி.டி.வி. பதிவில், நிக்கியின் பிளாட்டில், குற்றவாளி சாஹில் நுழையும் காட்சிகள் உள்ளன. நள்ளிரவு 12 மணிக்கு வந்து உள்ளார்.

இந்த வழக்கில், சாஹில் கெலாட்டுக்கு உதவிய குற்றத்திற்காக அவரது தந்தை வீரேந்தர் சிங், ஆஷிஷ் மற்றும் நவீன் என்ற 2 உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அமர் மற்றும் லோகேஷ் என மொத்தம் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீர விசாரித்து, கொலை திட்டத்தில் அவர்களுடைய பங்கு பற்றி ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் நவீன் டெல்லி போலீசில் கான்ஸ்டபிளாக உள்ளார்.

இந்த கொலை சம்பவத்திற்கு பின்னர், சக குற்றவாளிகளிடம் சாஹில் விவரங்களை கூறி உள்ளார். இதன்பின்னர், ஒன்றும் தெரியாததுபோன்று அனைவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர் என சிறப்பு குற்ற பிரிவு போலீஸ் கமிஷனர் ரவீந்தர் யாதவ் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபற்றிய விசாரணையில் சாஹில் போலீசாரிடம் கூறும்போது, முதலில் நிக்கியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சாலை விபத்தில் உயிரிழந்தது போல் காட்ட முயற்சித்து உள்ளார். ஆனால், அந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் போன நிலையில், நிகாம் போத் காட் பகுதியில் வைத்து நிக்கியை சாஹில் கொலை செய்து உள்ளார் என தெரிய வந்து உள்ளது.

சாஹில் மற்றும் அவரது தந்தை வீரேந்தர் ஆகியோரை சம்பவம் நடந்த தபாவுக்கு போலீசார் அழைத்து சென்று, சம்பவம் நடந்தது எப்படி என நடித்து காட்டும்படி விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், கைது செய்யப்பட்டு உள்ள சாஹிலின் தந்தை, மற்றொரு கொலை வழக்கில் முன்னாள் குற்றவாளி என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளனர்.

இந்த வழக்கில் சாஹில் கெலாட்டின் 5 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. நிக்கி திருமணத்தின்போது, தனது குடும்பத்தினரை அழைத்து உள்ளார். ஆனால், வேறு சாதி நபருடனான திருமணத்திற்கு நிக்கியின் குடும்பத்தினர் ஒப்புதல் அளிக்கவில்லை.

அதனாலேயே, நிக்கியும், சாஹிலும் ஒன்றாக வாழ்ந்த நொய்டாவில் உள்ள இல்லத்திற்கு சாஹிலை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் போலீசார் விசாரித்து உள்ளனர். எனினும், தொடக்கத்தில் இருந்தே நிக்கியின் குடும்பத்தினர் இவர்களது காதல் பற்றி தங்களுக்கு தெரியாது என கூறி வந்தனர்.


Next Story