பா.ஜ.க.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார்; பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன...?


பா.ஜ.க.வுடன் கைகோர்த்த நிதிஷ் குமார்; பிரசாந்த் கிஷோர் கூறுவது என்ன...?
x

கட்சி தொண்டர்கள் உள்பட ஒவ்வொருவரிடம் இருந்தும் எனக்கு வந்த ஆலோசனைகள் எல்லாவற்றையும் கவனித்தே இந்த முடிவுக்கு வந்தேன் என நிருபர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பாட்னா,

பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து வந்த அவரது தலைமையிலான அரசில் தேஜஸ்வி யாதவ் துணை முதல்-மந்திரியானார். இந்த சூழலில், ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ் ஈடுபட்டு வந்த நிலையில், பீகார் அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

சமீபத்தில் 2 நாட்களுக்கு முன் நிதிஷ், பீகார் கவர்னர் அர்லேகரை சந்தித்தது பரபரப்பாக பார்க்கப்பட்டது. இந்நிலையில், முதல்-மந்திரி பதவி ராஜினாமா, மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்து விலகல் என பீகார் அரசியல் நேற்று பரபரப்பு அடைந்தது.

எனினும், பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக நேற்று (ஞாயிற்று கிழமை) பொறுப்பேற்று கொண்டார். பீகாரின் முதல்-மந்திரியாக 9-வது முறையாக நிதிஷ் குமார் பொறுப்பேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5 மணியளவில் நடந்தது.

சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பொறுப்பேற்று கொண்டனர். 6 பேர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.

பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இந்த புதிய கூட்டணி பற்றி தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, 2025 பீகார் சட்டசபை தேர்தல் வரை இந்த புதிய கூட்டணி நீடிக்காது.

இந்த கூட்டணி அரசானது ஓராண்டு அல்லது அதற்கு குறைவான காலத்திற்கே நீடிக்கும் என்ற ரீதியில் கூறியுள்ளார். நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியின் முகம் ஆகவும் மற்றும் பா.ஜ.க.வின் ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த கூட்டணியானது, பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. இதனை உங்களுக்கு நான் எழுதி கூட தர முடியும் என்று கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கு பின் 6 மாதங்களில் இந்த மாற்றம் நடக்கும். நான் கூறுவனவற்றை குறித்து வைத்து கொள்ளுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மகாகத்பந்தன் கூட்டணி சரியாக இல்லை. அதனால் அதில் இருந்து விலக நேரிட்டது. கட்சி தொண்டர்கள் உள்பட ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எனக்கு ஆலோசனைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அவை எல்லாவற்றையும் கவனித்தே இந்த முடிவுக்கு வந்தேன். நான் வெளியேற வேண்டிய சூழல் காணப்பட்டது என்று கவர்னர் அர்லேகரிடம் பதவி விலகல் கடிதம் கொடுத்த பின்னர் நிருபர்களிடம் பேசிய நிதிஷ் குமார் கூறியுள்ளார்.


Next Story