அவசர சட்ட விவகாரத்தில் முழுமையான ஆதரவு - அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்த நிதிஷ் குமார்
டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
புதுடெல்லி,
மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ் குமார் சந்தித்துப் பேசினார். டெல்லி அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்ட விவகாரத்தில் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைப்பு முயற்சி
நாடு அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் இறங்கி உள்ளார்.
அவர் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறார். நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் அவர் கலந்து கொண்டு விட்டு நேராக டெல்லி சென்றார்.
கெஜ்ரிவாலுடன் சந்திப்பு
அங்கு நேற்று அவர், ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து, ஆம் ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலை அவரது இல்லத்தில் சந்தித்துப்பேசினார். கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பதவி ஏற்பு விழாவில் பா.ஜ.க. அல்லாத முதல்-மந்திரிகளை அழைத்த காங்கிரஸ், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை அழைக்காத நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. ஆனால் இது தொடர்பாக இந்த சந்திப்பில் பேசப்பட்டதா என தகவல் இல்லை.
டெல்லியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமனம், அதிகாரம் ஆகியவற்றில் மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசு தேசியத்தலைநகர் பணியாளர் குடிமைப்பணிகள் ஆணையம் அமைக்க வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்திருப்பது இரு தரப்பு மோதலை புதிய உச்சத்துக்கு கொண்டு போய் உள்ளது. அந்த வகையில், மத்திய அரசுடனான அதிகார மோதல் விவகாரத்தில், கெஜ்ரிவால் அரசுக்கு நிதிஷ்குமார் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்தார்.
மசோதாவை தோற்கடிக்க நடவடிக்கை
இந்த சந்திப்புக்குப் பின்னர் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டத்துக்கு மாற்றாக மசோதா கொண்டு வருகிறபோது அதை மாநிலங்களவையில் தோற்கடிக்க வேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சித்தலைவர்களுடனும் நான் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வேன். நாளை (செவ்வாய்க்கிழமை) நான் கொல்கத்தா செல்கிறேன். அன்று மாலை 3 மணிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்திக்கிறேன். அதைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறேன். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் பேசுமாறு நிதிஷ்குமாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
இந்த மசோதா மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட்டு விட்டால், அது அடுத்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவும் என்ற செய்தியை விடுக்கும். இதுதான் மக்களவைத் தேர்தலுக்கான செமிபைனல் (அரை இறுதி) ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதிஷ்குமார் ஆதரவு
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது:-
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. இதை எப்படி செய்ய முடியும்? அரசியல் சாசனத்தைப் பாருங்கள். எது சரியென்று பாருங்கள். அவர் (கெஜ்ரிவால்) சொல்வது சரி. நாங்கள் அவருடன் முழுமையாக இருக்கிறோம்.
கெஜ்ரிவால் டெல்லியில் நன்றாக பணியாற்றுகிறார். ஆனால் அவரது அரசை செயல்பட விடாமல் தடுப்பது வியப்பைத் தருகிறது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் ஈடுபடுவேன். அவசர சட்ட விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைமையுடன் பேசுவேன். கெஜ்ரிவாலுக்கு ஆதரவு அளிப்பதை யாரும் எதிர்ப்பார்கள் என்று நான் கருதவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.