' இந்தியா' அணி கட்சிகள் மீது அதிருப்தி; பாஜக கூட்டணியில் இணைய நிதிஷ்குமார் திட்டமா?
நிதிஷ்குமார் இணைவது பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளிக்கையில், அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால், பாஜக பரிசீலிக்கும் என்று கூறினார்.
பாட்னா
பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். பின்னர், பா.ஜனதா ஆதிக்கம் செலுத்துவதாக கருதிய அவர், 2 ஆண்டுகளுக்கு முன்பு, லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் கைகோர்த்தார்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக 'இந்தியா' கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். ஆனால், சமீபகாலமாக 'இந்தியா' கூட்டணி கட்சிகள் மீது அவருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அவரை நியமிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள நிர்வாகிகள் வெளிப்படையாக வலியுறுத்தினர். ஆனால் அதை கூட்டணி கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.
இதனால் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் நடந்த 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் யாத்திரை, 1-ந் தேதிவாக்கில் பீகாரில் நுழைகிறது. காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தபோதிலும், யாத்திரையில் நிதிஷ்குமார் பங்கேற்க மாட்டார் என்று அவரது கட்சி அறிவித்துள்ளது. மேலும், பீகாரில் அவரது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் கட்சியுடனும் அவருக்கு அதிருப்தி வலுத்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பீகார் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த நிதிஷ்குமார் விரும்புகிறார். ஆனால், லாலு கட்சி அதை ஏற்கவில்லை. ஆட்சி நிர்வாகத்திலும், அரசியலிலும் நிதிஷ்குமாரின் முக்கியத்துவத்தை குறைக்க லாலு கட்சி காய் நகர்த்தி வருவதாக ஐக்கிய ஜனதாதளம் கருதுகிறது.
அதே சமயத்தில், சமீபகாலமாக பா.ஜனதாவுடன் நிதிஷ்குமார் நெருக்கம் காட்டி வருகிறார். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி கர்பூரி தாக்குருக்கு 'பாரத ரத்னா' விருது அறிவித்ததற்காக, பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். அதே அறிக்கையில், ''குடும்ப உறுப்பினர்களை அரசியலில் ஊக்குவிப்பது இல்லை என்ற கர்பூரி தாக்குர் கொள்கையை பின்பற்றுகிறோம்'' என்று நிதிஷ்குமார் கூறியிருந்தார். லாலு குடும்பத்தை அவர் மறைமுகமாக தாக்குவதாக கருதப்பட்டது.
அதற்கு லாலுபிரசாத்தின் மகள் ரோகிணி ஆச்சார்யா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் ''காற்று திசைமாறுவது போல், கொள்கையை மாற்றிக்கொள்பவர்'' என்று பெயர் குறிப்பிடாமல் நிதிஷ்குமாரை விமர்சித்தார். இருப்பினும், சில மணி நேரங்களில் அந்த பதிவை நீக்கினார். இந்த பின்னணியில், நிதிஷ்குமார் 'இந்தியா' கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதற்கேற்ப அவரை விமர்சிப்பதை பா.ஜனதா நிறுத்தி விட்டது.
நிதிஷ்குமார் இணைவது பற்றிய கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளிக்கையில், ''அப்படி ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால், பாஜக பரிசீலிக்கும்'' என்று கூறினார். பீகார் அரசியலை நன்கு அறிந்த ஒரு பா.ஜனதா தலைவர், ''கடந்த கால கசப்புணர்வை நினைக்காமல், எதிர்காலத்தை கருதி முடிவு எடுப்போம்'' என்று கூறினார். மேற்கு வங்காளத்திலும், பஞ்சாப்பிலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், பீகாரில் நிதிஷ்குமார் எடுக்கப்போகும் முடிவு பற்றி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.