கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை


கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை
x

மாநிலங்களவை, மேல்-சபை தேர்தல் நடக்க உள்ளதால் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு

மாநிலங்களவை, மேல்-சபை தேர்தல் நடக்க உள்ளதால் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

பசவராஜ் பொம்மைக்கு நெருக்கடி

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் கூட இல்லாததால் மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மந்திரிசபையை மாற்றியமைக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இதையடுத்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கடந்த மாதத்தில் 3 முறை டெல்லிக்கு சென்று பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அத்துடன் பெங்களூருவுக்கு வந்த போது மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷாவுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தி இருந்தார். இதன் காரணமாக இந்த மாதம் (மே) மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மந்திரிசபை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அருண்சிங்குடன் சந்திப்பு

அதே நேரத்தில் கர்நாடகத்தில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை தேர்தல், கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 7 உறுப்பினர் பதவிகள் மற்றும் ஆசிரியர்-பட்டதாரிகளுக்கான 4 தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்ய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜனதா தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்கள் தோ்வு குறித்து மேலிட தலைவா்களுடன் ஆலோசிக்க அவர் சென்றிருப்பதாக கூறப்பட்டது.

பின்னர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியையும், நேற்று காலையில் கர்நாடக மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சந்தித்து பேசி இருந்தார். பின்னர் நேற்று மதியம் டெல்லியில் இருந்து அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்தார். முன்னதாக நேற்று காலையில் டெல்லியில் வைத்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அமித்ஷாவுடன் பேச்சு

கர்நாடகத்தில் 4 மாநிலங்களவை, 7 மேல்-சபை உறுப்பினர் பதவிகள், 2 பட்டதாரிகள் மற்றும் 2 ஆசிரியர்கள் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த டெல்லிக்கு வந்திருந்தேன். மத்திய உள்துறை மந்திரியான அமித்ஷா ஏற்கனவே கலந்துகொள்வதாக அறிவித்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று விட்டார். இதனால் அமித்ஷாவை சந்தித்து பேச முடியவில்லை.

இதனால் அமித்ஷாவை தொடர்புகொண்டு மாநிலங்களவை, மேல்-சபை, ஆசிரியா், பட்டதாரிகள் தொகுதிகளுக்கு நடக்கும் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு, வேட்பாளர்கள் பட்டியலுக்கு அனுமதி அளிப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலிட பொறுப்பாளர் அருண்சிங்குடன் ஆலோசிக்கும்படி அமித்ஷா தெரிவித்திருந்தார்.

வேட்பாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல்

அதன்படி, அருண்சிங்கை சந்தித்து வேட்பாளர்கள் தேர்வு, மாநில அரசியல் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினேன். பெங்களூருவில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தின் போது வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டு இருந்த வேட்பாளர் பட்டியலுக்கு மேலிட தலைவா்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு, ஒப்புதல் அளிக்கப்படும் என்று அருண்சிங்கும் தெரிவித்துள்ளார்.

மேல்-சபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே இருப்பதால், விரைவாக வேட்பாளர்கள் பட்டியலை அனுப்பும்படி கேட்டு கொண்டுள்ளேன். தேர்தலில் போட்டியிட எந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறித்து கட்சி மேலிடமே முடிவு செய்து அறிவிக்கும். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அனுப்பி வைத்திருந்த பட்டியலுக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மந்திரிசபை விரிவாக்கம் இல்லை

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகிற 23-ந் தேதி மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தேர்தல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து ஆலோசிக்க மட்டுமே டெல்லி வந்தேன். மந்திரிசபை விரிவாக்கம், மந்திரிசபை மாற்றியமைப்பு குறித்து மேலிட தலைவர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

மாநிலங்களவை, கர்நாடக மேல்-சபை தேர்தல் முடியும் வரை மந்திரிசபை விரிவாக்கம் இல்லை. உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க தாவோஸ் பயணம் மேற்கொள்வது குறித்து, தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சுற்றுப்பயணம் செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எம்.எல்.ஏ.க்கள் தொடர் ஏமாற்றம்

பெங்களூருவில் இருந்து திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்ற முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, அமித்ஷா உள்பட தலைவர்களை சந்தித்து பேச முடியாமல் வெறும் கையுடன் திரும்பி வந்துள்ளார். அதே நேரத்தில் தற்போது மந்திரிசபை விரிவாக்கம் இல்லை என்று திட்டவட்டமாக கூறி இருப்பதால், மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்த எம்.எல்.ஏ.க்கள் தொடர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story