காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஓட்டெடுப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு


காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: ஓட்டெடுப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
x

நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 2¼ மணி நேரம் பதில் அளித்தார். காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. ஓட்டெடுப்புக்கு முன்பே எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

புதுடெல்லி,

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் மக்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுத்தார்.

3-வது நாள் விவாதம்

கடந்த 8-ந் தேதி, மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.

நேற்று முன்தினம் 2-வது நாள் விவாதத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அப்போது, மணிப்பூரில் பாரத மாதாவை கொன்று விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். அதே நாளில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் பேசினார்.

இந்நிலையில், நேற்று 3-வது நாளாக விவாதம் நடந்தது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசினார்.

3 நாட்களாக நடந்த விவாதத்துக்கு மாலை 5 மணியளவில், பிரதமர் மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தார்.

சவுத்ரி புறக்கணிப்பு

பிரதமர் மோடி பதிலுரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கடந்த 1999, 2003, 2018 ஆகிய ஆண்டுகளில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அப்போது எதிர்க்கட்சி தலைவர்களாக இருந்த சரத்பவார், சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்தான் முதலில் பேசினர்.

ஆனால், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அமித்ஷா சொன்ன பிறகுதான் அவர் பேச முடிந்தது. அவர் ஏன் ஒதுக்கப்பட்டார் என்று தெரியவில்லை. ஒருவேளை, கொல்கத்தாவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புதான் காரணமா?

3-வது முறையாக ஆட்சி

நாட்டின் வளர்ச்சி சார்ந்த மசோதாக்கள் மீது விவாதம் நடக்கும்போது, எதிர்க்கட்சிகள் அதை நடத்த அனுமதிப்பது இல்லை. அவர்களுக்கு தேசத்தை விட கட்சிதான் முக்கியம்.

கடந்த 2018-ம் ஆண்டு இதேபோல் எங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதுஎங்களுக்கு மங்களகரமாக அமைந்தது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதைவிட பெரிய வெற்றி பெற்றோம்.

அதுபோல், இப்போது கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானமும் எங்களுக்கு மங்களகரமாக அமையும். அடுத்த ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில், முன்பை விட அமோக வெற்றி பெறுவோம். 3-வது முறையாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.

2028-ம் ஆண்டிலும் தீர்மானம்

2028-ம் ஆண்டில் நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும்போது, பொருளாதாரத்தில் உலகின் 3-வது இடத்தை இந்தியா பெற்றிருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, பயங்கரவாத தாக்குதல் விஷயத்தில் பாகிஸ்தான் சொல்வதை நம்பும். நமது ராணுவம் சொல்வதை நம்பாது. காஷ்மீரில் உள்ள சாமானியர்கள் மீது நம்பிக்கை வைக்காது. ஆனால், பிரிவினைவாதிகள் மற்றும் பாகிஸ்தான் கொடி பிடிப்பவர்கள் மீது நம்பிக்கை வைக்கும்.

வெளிநாட்டு மண்ணில் இருந்து இந்தியாவை பற்றி எந்த எதிர்மறையான விஷயம் வந்தாலும், அதை காங்கிரஸ் பிடித்துக் கொள்கிறது. நாட்டில் புதிய நம்பிக்கை, ஆற்றல், உறுதிப்பாடு வந்தபோதிலும், அதை காணாமல் நெருப்புக்கோழி மனநிலையில் காங்கிரஸ் இருக்கிறது.

நம்பிக்கை இல்லை

காங்கிரஸ் கட்சி மீது இந்திய மக்களுக்கு நம்பிக்கை இல்லை. மேற்கு வங்காளத்தில் கடைசியாக 1972-ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு, 'காங்கிரஸ் வேண்டாம்' என்று அம்மக்கள் கூறிவிட்டனர்.

உத்தரபிரதேசம், பீகார், குஜராத் ஆகிய மாநிலங்களில் கடைசியாக 1985-ம் ஆண்டு வெற்றி பெற்றது. அதன்பிறகு அம்மாநில மக்கள், 'காங்கிரஸ் வேண்டாம்' என்று கூறிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சி ஆணவம் நிறைந்தது. தேசிய கொடியில் இருந்து மூவர்ணத்தை எடுத்துக் கொண்டது. 'காந்தி' என்ற பெயரையும் திருடிக்கொண்டது.

ரகசிய வரம்

காங்கிரஸ் கட்சி யாரையாவது எதிர்த்தால், அவர்கள் செழித்து வளர்வார்கள். அப்படி ஒரு ரகசிய வரம் வாங்கி வந்துள்ளது. அதற்கு நானே உதாரணம். என்னை 20 ஆண்டுகளாக காங்கிரஸ் வசை பாடி வருகிறது. ''மோடி, உங்களுக்கு கல்லறை தோண்டப்படுகிறது'' என்பதுதான் அக்கட்சிக்கு பிடித்த கோஷம். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், எல்.ஐ.சி., வங்கிகள் ஆகியவற்றை காங்கிரஸ் குறிவைத்தது. ஆனால், அவை மூன்றும் நல்ல வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளன.

தற்போது, நாட்டுக்கு சாபமிடுகிறார்கள். அதனால், நாடு இன்னும் வலிமை அடையும். அதன்மூலம், மத்திய அரசும் மேலும் வலிமை அடையும்.

1,000 ஆண்டு தாக்கம்

இந்தியா, உலக அளவில் புதிய உயரத்தை அடையும். இந்தியா மீதான உலகத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியா, மிக முக்கியமான காலகட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதன் தாக்கத்தை இன்னும் 1,000 ஆண்டுகளுக்கு உணரலாம். அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு தேவையான வலிமையான அடித்தளத்தை தங்கள் கடின உழைப்பால் மக்கள் அமைத்துள்ளனர்.

இந்திய பொருளாதாரம், தானாக வளரும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். அவர்களுக்கு எந்த புரிதலும் இல்லை. 'நிதிஆயோக்' அறிக்கைப்படி, கடந்த 5 ஆண்டுகளில் 13 கோடியே 50 லட்சம் பேர், வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகளுக்கு என் மீது மிகவும் பாசம். அது எந்த அளவுக்கு என்றால், நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, தண்ணீர் குடித்தால் கூட அதை பிரச்சினை ஆக்குவார்கள். 24 மணி நேரமும் மோடியை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் மாற்றினால் ஆட்சிக்கு வரலாம்

கூட்டணியின் பெயரை மாற்றினால், ஆட்சிக்கு வந்து விடலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. 'இந்தியா' என்று புதிய பெயர் வைத்து விட்டனர். அதன்மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் இறுதிச்சடங்கு செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி 2 மணி 15 நிமிட நேரம் பேசினார். அவர் தனது உரையை முடிப்பதற்கு முன்பே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பேட்டி அளித்த எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் தனது உரையில் 90 நிமிடங்கள் வரை மணிப்பூர் குறித்து பேசாததை கண்டித்து வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். பிரதமர் சபையில் பேசும்போதும் எதிர்க்கட்சியினர் மணிப்பூர், மணிப்பூர் என்று குரல் எழுப்பினர்.

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பை குறிப்பிட்ட மோடி, ''கேள்வி எழுப்பியவர்களுக்கு பதில் கேட்பதற்கு தைரியம் இல்லை. சுட்டு விட்டு தப்பி ஓடுகிறார்கள்'' என்று கூறினார்.

தோல்வி

பிரதமர் மோடியின் பதிலுரைக்கு பிறகு, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைவரும் எதிர்த்து குரல் கொடுத்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து விட்டதால், ஆதரவு குரல் எழவில்லை.

அதனால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

விதிமுறைகளுக்கு முரணாக நடந்ததாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் செய்யப்பட்டார்.


Next Story