எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து எந்த ஊடகமும் விவாதிக்கவில்லை - ராகுல் காந்தி ஆதங்கம்


எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் குறித்து எந்த ஊடகமும் விவாதிக்கவில்லை - ராகுல் காந்தி ஆதங்கம்
x
தினத்தந்தி 20 Dec 2023 12:01 PM GMT (Updated: 20 Dec 2023 12:25 PM GMT)

150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காலை இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பதாகைகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது திரிணமுல் காங்கிரசின் எம்.பி கல்யாண் பானர்ஜி, மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் அவை நடவடிக்கையின்போது செய்வதை போல நடித்துக் (மிமிக்ரி) காட்டினார். அப்போது, ராகுல் காந்தி, அதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். ஜெகதீப் தன்கரை போல திரிணமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி நடித்துக் காட்டிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

பாஜக இந்த செயலுக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும், 'அரசியல் கட்சிகளுக்குள் பரிமாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மாநிலங்களவைத் தலைவரை கேலி (மிமிக்ரி) செய்யும் எம்.பி.,யை மற்றொரு கட்சியின் மூத்த தலைவர் வீடியோ எடுக்கிறார். இது முட்டாள்தனமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது' என்று தனது கண்டனத்தை தெரிவித்தார். இவை சர்ச்சையான நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஜெகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தார்.

இந்தநிலையில்,ஜெகதீப் தன்கர் அவையை வழிநடத்தும் விதத்தை, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, யார், அவமானப்படுத்தினார்கள்? எப்படி சொல்கிறீர்கள்?, நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர், அதை நான் வீடியோ எடுத்தேன்.

ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, கருத்துகளை வெளியிடுகின்றன. 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர். அது பற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் நடத்தவில்லை.

எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து யாரும் விவாதிக்கவில்லை. அதானி விவகாரம், ரபேல் மோசடி வேலைவாய்ப்பின்மை குறித்தும் எதுவும் பேசவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story