காங்கிரசிடம் இருந்து பாடம் கற்க தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


காங்கிரசிடம் இருந்து பாடம் கற்க தேவை இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

காங்கிரசிடம் இருந்து பாடம் கற்க தேவை இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

ராய்ச்சூரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசியதாவது:-

கற்க தேவை இல்லை

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சமதர்ம கொள்கையின் பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் அவர் காங்கிரசில் சேர்ந்த பிறகு அந்த கொள்கையை மறந்துவிட்டார். தன்னை விட சிறிய வயதுடைய ராகுல் காந்திக்கு கீழ் அவர் பணியாற்றுகிறார். அவர் ஓடு என்றால் சித்தராமையா ஓடுகிறார், உட்காரு என்றால் உட்கார்ந்து கொள்கிறார். இது சுயமரியாதையின் அடையாளம் அல்ல.

ஆட்சியை பிடிக்க எதை செய்யவும் காங்கிரசார் தயாராக உள்ளனர். அரசியல் தனது அங்கீகாரத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை நடத்துகிறார். ராகுல் காந்தியை மீண்டும் முன்னிலைப்படுத்தும் திட்டம் தான் இந்த பாதயாத்திரை. காங்கிரசாரிடம் இருந்து நாங்கள் பாடம் கற்க தேவை இல்லை. காங்கிரஸ் மூழ்கும் படகு. அங்கு இருப்பவர்கள் இன்னும் சிறிது காலத்தில் இந்த பக்கம் வருவார்கள்.

வெற்றி பெறுவேன்

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்கள் பற்றி கவலைப்படவில்லை. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். இது காங்கிரசின் முயற்சியால் நடந்தது என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள். கர்நாடகத்தில் காங்கிரசார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அப்போது அவர்களுக்கு தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் பற்றி தெரியவில்லை.

நாங்கள் இன்று (நேற்று) தொடங்கியுள்ள "ஜனசங்கல்ப" சுற்றுப்பயணம் வருகிற டிசம்பர் மாதம் வரை நடைபெறும். முதல்கட்டமாக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பயணம் மேற்கொண்டு கட்சி பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறோம். ராய்ச்சூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தொடங்குவது குறித்து மத்திய அரசுடன் பேசுவேன். இதற்காக முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story