ராகுல் காந்தி இதயத்தில் குஜராத்திற்கு இடமில்லை - சி.ஆர். பாட்டீல்
ராகுல் காந்தியின் இதயத்தில் குஜராத்திற்கு இடம் இல்லாததினால் தான் பாரத் ஜோடோ' யாத்திரை இங்கு வரவில்லை என பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத்,
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. இவர் 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் பாதயாத்திரையை கடந்த மாதம்(செப்டம்பர்) 7-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் 19 நாட்கள் பாதயாத்திரை நடைபெற்றது.
ராகுல்காந்தியின் பாதயாத்திரை கடந்த 30-ந் தேதி கர்நாடகத்துக்குள் நுழைந்தது. தற்போது கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது பயணிக்கிறது. இதனை தொடர்ந்து மராட்டியம், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பயணிக்க உள்ளது.ஆனால், 'பாரத் ஜோடோ' யாத்திரையானது குஜராத் மாநிலம் வழியாக செல்லவில்லை.
இந்த நிலையில், ராகுல் காந்தியின் இதயத்தில் குஜராத்திற்கு இடமில்லை எனவே தான், குஜராத் மாநிலம் வழியாக 'பாரத் ஜோடோ' யாத்திரை செல்லவில்லை என பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் எம்.பி. பாரத் ஜோடோ யாத்திரையை நடத்துகிறார். ஆனால் குஜராத்தை ஓரங்கட்டுகிறார். இதற்கு காரணம் அவரின் இதயத்தில் குஜராத்துக்கு இடமில்லை என்பது தான். அதனால் தான் அவர் இங்கு வர விரும்பவில்லை.
குஜராத் மக்கள் கடந்த 27 ஆண்டுகளாக காங்கிரசை நிராகரித்து வருவதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் மீண்டும் நிராகரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.