முழு அடைப்பு போராட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


முழு அடைப்பு போராட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x

காவிரி விவகாரத்தில் எந்த போராட்டத்தையும் அரசு தடுக்காது என்றும், முழு அடைப்பால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களுரு:-

பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

எந்த பிரயோஜனமும் இல்லை

காவிரியில் தமிழ்நாட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படியே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக பிறப்பித்துள்ள உத்தரவை திரும்ப பெறும்படி காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. காவிரி பிரச்சினைக்காக பெங்களூருவில் வருகிற 26-ந் தேதிக்கு முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழு அடைப்பு காரணமாக எந்த பிரயோஜனமும் ஏற்பட போவதில்லை. எனவே முழு அடைப்பை கைவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பெங்களூருவில் முழு அடைப்பு நடத்தி கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் யாரும் சட்டத்தை தங்களது கையில் எடுக்க கூடாது. விவசாயிகள் மற்றும் கர்நாடகத்தின் நலனை காக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது.

போராட்டத்தை அரசு தடுக்காது

விவசாயிகள், கன்னட அமைப்புகள், கன்னட திரையுலகம் உள்ளிட்ட எந்த அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், அதனை அரசு தடுக்காது. எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், அரசு தடுக்காது. ஆனால் காவிரி பிரச்சினையை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்துவருகின்றனர். நாங்கள் விவசாயிகளை பாதுகாப்போம்.

காவிரி கர்நாடகத்தின் சொத்து இல்லை என்று தமிழ்நாட்டினர் கூறி வருவது பற்றி கேட்கிறீர்கள்.காவிரி கர்நாடகத்தின் சொத்து இல்லை. அது தென்னிந்தியாவின் சொத்தாகும். தமிழ்நாட்டின் ஏஜென்ட்டாக காங்கிரஸ் அரசு செயல்படுவதாக எடியூரப்பா கூறியுள்ளார். நாங்கள் விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story