கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதைெயாட்டி மாநகராட்சி, கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
பெங்களூரு:
வேட்புமனு தாக்கல்
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும். அதனால் அந்த நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர் மனு தாக்கல் செய்ய வரும்போது, உடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்படுவார்கள்.
டெபாசிட் தொகை
வேட்புமனு படிவம் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தகவல்களை நிரப்பி, அதன் அச்சு பிரதி எடுத்து தேர்தல் அதிகாரியிடம் அதை மனுவாக தாக்கல் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதே போல் சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் ஆன்லைனிலேயே நிரப்பி அதன் அச்சு பிரதி எடுத்து, அதில் நோட்டரி வக்கீலின் கையெழுத்து பெற்று தாக்கல் செய்யலாம்.
வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை ஆன்லைனில் செலுத்தலாம். நேரிலும் டெபாசிட் தொகையை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மனுக்களை தாக்கல் செய்ய வருகிற 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
கலெக்டர் அலுவலகம்
பெங்களூரு மாநகராட்சியை பொறுத்தவரையில் மண்டல அலுவலகங்கள் தேர்தல் அலுவலகங்களாக செயல்படும். அந்த மண்டல அலுவலகங்களில் வேட்பாளர்கள் வந்து மனு தாக்கல் செய்வார்கள். மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதுேபால் கலெக்டர், தாலுகா அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், வருவாய் மண்டல அலுவலகங்களும் தேர்தல் அலுவலகமாக செயல்படும். அங்கு சென்றும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள்.
வேட்புமனு தாக்கலையொட்டி மனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேர்தல் அலுவலகத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பே இரும்பு கம்பி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்தல் களம் சூடுபிடிக்கும்
ஆளும் பா.ஜனதா இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. மூன்று கட்சிகளும் முழுமையாக வேட்பாளர் பட்டியலை அறிவிக்காததால் கர்நாடக தேர்தல் களம் இதுவரை மந்தநிலையில் உள்ளது.
மனுதாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மனு தாக்கல் தொடங்கினாலும், முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்த வாரத்தில் தான் மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.