பத்ம விருதுகள் 2023-க்கான பரிந்துரைகள் வரவேற்பு - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
2023-ம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
புதுடெல்லி,
இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில் 2023-ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.