சிறையில் உள்ள அனைவரும் குற்றவாளி இல்லை: அமித்ஷா பேச்சு
சமூகத்தில் சிறையின் மீது உள்ள பார்வையானது மாற வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பேசியுள்ளார்.
ஆமதாபாத்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கன்காரியா என்ற இடத்தில் 6-வது அகில இந்திய சிறைச்சாலை சந்திப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும்போது, குஜராத்தில் முதல் சிறைச்சாலை சந்திப்பு நடந்தபோது, நரேந்திர மோடி முதல்-மந்திரியாகவும், நான் குஜராத்தின் உள்துறை மந்திரியாகவும் இருந்தோம். தற்போது 2-வது முறையாக நடைபெறும் நிகழ்ச்சியின்போது, இந்தியாவின் பிரதமராக மோடி உள்ளார்.
நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை எனக்கு அவர் வழங்கி உள்ளார். உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் அதிகம் மகிழ்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அமித்ஷா பேசும்போது, சமூகத்தில் சிறையின் மீது உள்ள பார்வையானது மாற வேண்டும். சிறைச்சாலையில் உள்ள ஒவ்வொரு நபரும் இயற்கையிலேயே குற்றவாளி கிடையாது. சில சமயங்களில், அதன் சூழ்நிலைகள் அவர்களை குற்றவாளியாக்குகிறது.
ஆனால், சமூகம் தொடர்ந்து சீராக செயல்பட வேண்டும் என்பது தேவையான நடைமுறை என அவர் கூறியுள்ளார். இயற்கையிலேயே, பிறவியிலேயே, குற்றங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்கள் அல்லாத நபர்களை சமூகத்தில் மீண்டும் கொண்டு சென்று சேர செய்யும் பொறுப்பு சிறை நிர்வாகத்திற்கு உள்ளது.
வலிமையான இந்தியாவுக்கான மந்திரம், பிரதமர் மோடியால் நாட்டுக்கு தரப்பட்டு உள்ளது. இந்த செய்தியை அனைத்து சிறைச்சாலைக்கும் கொண்டு சேர்க்க வேண்டியதும் சிறை நிர்வாகத்தின் பொறுப்பு ஆகும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பேசியுள்ளார்.