பொதுமக்கள் அமைதி, நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்: அரியானா முதல் மந்திரி வேண்டுகோள்


பொதுமக்கள் அமைதி, நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்:  அரியானா முதல் மந்திரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 Aug 2023 2:45 AM GMT (Updated: 3 Aug 2023 5:09 AM GMT)

அரியானாவில் நடந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர், 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

சண்டிகார்,

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை நடந்த விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலத்தில் சிலர் கல் வீசி தாக்கினர். அதைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. வாகனங்கள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் பரவிய வன்முறையில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் நேற்று வௌியிட்ட அறிக்கையில், 'அரியானாவில் நடந்த வன்முறையில் 2 ஊர்க்காவல் படையினர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூ மாவட்டத்தில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு சில இடங்களில் ஒன்றிரண்டு வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.

வன்முறையில் ஈடுபட்டு தலைமறைவானவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். வன்முறைக்கு சதி செய்தவர்கள் கண்டறியப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் அமைதி, நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில உள்ளாட்சித்துறை மந்திரி அனில் விஜ், 'வன்முறையைத் தூண்டிய சமூக வலைதளப் பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதுவரை 41 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரேவாரி, குருகிராமிலும் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன' என்றார்.

இந்த நிலையில் அரியானாவையொட்டி உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் நொய்டா நகரில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அரியானா வன்முறையைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.மேலும், அரியானா வன்முறையில் கொல்லப்பட்ட பஜ்ரங் தள தொண்டர்கள் இருவர் உள்ளிட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடியும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.20 லட்சமும் நிவாரண உதவியாக வழங்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தலைநகர் டெல்லியிலும் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள தொண்டர்கள் நேற்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. டிரோன்களை பயன்படுத்தி தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.


Next Story