ரெயில் விபத்துகளை அல்ல; குற்றங்களை விசாரிக்கவே சி.பி.ஐ. உள்ளது: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்


ரெயில் விபத்துகளை அல்ல; குற்றங்களை விசாரிக்கவே சி.பி.ஐ. உள்ளது: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
x

சி.பி.ஐ. அமைப்பு குற்றங்களை விசாரிக்கவே உள்ளது என்றும் ரெயில் விபத்துகளை விசாரிக்க அல்ல என்றும் பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசா ரெயில் விபத்து சம்பவம் பற்றி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், துரதிர்ஷ்ட வகையில், ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், இதில் சில பிரச்சனைகள் உள்ளன என ஒப்பு கொள்ள விரும்பவில்லை.

அவர் முன்பே, விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டு விட்டது என கூறியுள்ளார். ஆனால், சி.பி.ஐ. விசாரணை தேவை என கோரிக்கை விடுகிறார்.

குற்றங்களை விசாரிக்கவே சி.பி.ஐ. அமைப்பு உள்ளது. ரெயில் விபத்துகளை பற்றி விசாரிப்பதற்காக அல்ல. சி.பி.ஐ. அல்லது வேறு எந்த சட்ட அமலாக்க துறையோ, தொழில்நுட்பம் மற்றும் அரசியல் தோல்விகளை சரி செய்ய பொறுப்பேற்க இயலாது.

ரெயில்வே பாதுகாப்பு, சிக்னல் மற்றும் பராமரிப்பு விசயங்களுக்கான தொழில்நுட்ப நிபுணர்களும் அவர்களிடம் கிடையாது என கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தொடர்ந்து அவர், முந்தின அரசுகளின் திட்டங்களான ரக்சா கவாச் என பெயரிடப்பட்ட திட்டம் ஏன்? நிறுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச்சில் கவாச் என உங்களது அரசு மறுபெயர் சூட்டியது. அது புதிய கண்டுபிடிப்பு என்பது போன்று ரெயில்வே மந்திரி கூறி கொண்டார்.

ஆனால், ஏன் இந்திய ரெயில்வேயில் 4 சதவீத பாதைகளிலேயே இதுவரை கவாச் பாதுகாப்பு நடைமுறை காணப்படுகிறது? என்ற கேள்வி இன்னும் நீடிக்கிறது என கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், ரெயில்வே துறையில் பாதுகாப்பு ஆலோசனைகளை அமல்படுத்தாமலும், தண்டவாள புதுப்பித்தலுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்தும் உள்ளது என மத்திய அரசை குறையாக கூறினார்.


Next Story