ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி உட்பட பிற மொழிகளை ஊக்குவிப்பதில் எவ்வித தவறும் இல்லை - பாஜக பொதுச்செயலாளர் சி டி ரவி


ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தி உட்பட பிற மொழிகளை ஊக்குவிப்பதில் எவ்வித தவறும் இல்லை - பாஜக பொதுச்செயலாளர் சி டி ரவி
x

இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கடந்த மாதம் ஒரு அறிக்கை அளித்தது.

அதில், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் போன்றவற்றிலும், மத்திய பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்; ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெற செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இது இந்தி திணிப்பு முயற்சியாக பார்க்கப்படுவதால், இந்தி பேசாத மாநிலங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் 'தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் எதிர்ப்புக்குரலை பதிவு செய்தார்.' இந்த முயற்சிக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதன் எதிரொலியாக இந்த விவகாரத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது கண்டனத்தை பதிவுசெய்து பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அதில் 'மற்ற மொழிகளை காட்டிலும், எந்த ஒரு குறிப்பிட்ட மொழியையும் பயிற்றுமொழியாக்க முன்னுரிமை தரக்கூடாது. அப்படி செய்வது திணிப்பாகவே பார்க்கப்படும். அது, நமது கூட்டுறவு கூட்டாட்சி முறைக்கு நல்லதல்ல. இந்த விவகாரத்தில் நீங்கள் கூடிய விரைவில் தலையிட்டு, தேவையான, சரிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.' இவ்வாறு அதில் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு முயற்சிக்கு தெலுங்கானா மாநிலமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அங்கு ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவரும், முதல்-மந்திரி சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமாராவ் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிராக தென் மாநிலங்கள் போர்க்கொடி உயர்த்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், 'இந்தி பேசாத மாநிலங்கள் மீது மத்திய அரசு இந்தியை திணிக்கிறது' என்று கூறும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனங்களை தமிழக பாஜக பொறுப்பாளர் சி டி ரவி மறுத்துள்ளார்.

இது குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி டி ரவி இன்று கூறியதாவது:-

ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தி உட்பட பிற இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் தவறில்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாய்மொழிகளை வளர்த்து வருகிறது.

ஆங்கிலேய காலனித்துவ மனநிலையில் இருந்து மக்கள் வெளியே வர வேண்டும். 'ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியை' ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறதே தவிர, 'தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் அல்லது மராத்தி போன்ற பிராந்திய மொழிகளுக்குப் பதிலாக இந்தியை' கொண்டுவரவில்லை.

'மலையாளத்தின் பெருமை அல்லது தமிழின் பெருமை' என்று ஒரு தலைவர் முன்னிறுத்தினால், அதை எங்கள் கட்சி வரவேற்கிறது. ஆனால் ஒரு தலைவர் ஆங்கிலத்திற்கு ஆதரவாக பேசினால், அது பொருத்தமானதல்ல.மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை ஆதரித்தனர்.

இவ்வாறு சி டி ரவி கூறினார்.


Related Tags :
Next Story