கிரிக்கெட் வீரர் தோனியின் பள்ளிக்கு நோட்டீஸ்


கிரிக்கெட் வீரர் தோனியின் பள்ளிக்கு நோட்டீஸ்
x

சி.பி.எஸ்.இ. என கூறிவிட்டு மாநில பாடத்திட்டம் நடத்தியதாக கிரிக்கெட் வீரர் தோனியின் பள்ளிக்கு கர்நாடக பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெங்களூரு:-

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்

பெங்களூருவில் ஆர்சிட் இன்டர்நேஷனல் நிர்வாகத்தின் கீழ் 20-க்கும் மேற்பட்ட தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் சில பள்ளிகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் நடத்துவதாக கூறிவிட்டு, மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டத்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறினர்.

இதையடுத்து கடந்த வாரம் நாகரபாவி பகுதியில் உள்ள ஆர்சிட் பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர் குவிந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம், மாநில பாடத்திட்டம் நடத்தப்படுவது குறித்து முறையிட்டனர். அப்போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே பெற்றோர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார், பள்ளி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அந்த பள்ளி சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என கூறிவிட்டு மாநில திட்டத்தை நடத்தி வந்தது உறுதியானது.

எம்.எஸ்.தோனியின் பள்ளி

மேலும், இதபோல் 17 பள்ளிகள் பெங்களூருவில் செயல்படுவதும், 4 பள்ளிகள் மட்டுமே சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்று இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமான தனியார் பள்ளிக்கும் கர்நாடக பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு சிங்கசந்திரா பகுதியில் தோனிக்கு சொந்தமான சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கடந்த 2021-22-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது.

விசாரணை

இங்கு சுமார் 248 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பள்ளியில் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெற்ற பள்ளி என கூறிவிட்டு, மாநில பாடத்திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விசாரணையில், பள்ளியில் மாணவர்களை சேர்க்கும்போது, 2 மாதங்களில் சி.பி.எஸ்.இ. அங்கீகாரம் பெறப்படும் என கூறி சேர்க்கை நடந்தது தெரிந்தது.

பெற்றோர்கள் சார்பில் கூறுகையில் மாணவர்களிடம் குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதும் தெரிந்தது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story