சட்டவிரோதமாக சொத்து சேர்த்த புகார்: விசாரணைக்கு ஆஜராக ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு


சட்டவிரோதமாக சொத்து சேர்த்த புகார்: விசாரணைக்கு ஆஜராக ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு நோட்டீசு
x

சட்டவிரோதமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் விசாரணைக்கு ஆஜராக ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு ஊழல் தடுப்பு படையினர் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் ஜமீர் அகமதுகான். இவருக்கு சொந்தமான பெங்களூரு வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது கிடைத்த ஆதாரத்தின் பேரில் ஜமீர் அகமதுகான் சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதாக கூறி, பெங்களூரு ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு, அமலாக்கத்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து கடந்த 6-ந் தேதி ஜமீர் அகமதுகானுக்கு சொந்த வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். இந்த சோதனையின் போது அவர், வருமானத்தை விட ரூ.87½ கோடிக்கு சொத்து சேர்த்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 8-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ஜமீர் அகமதுகானுக்கு போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர்.

ஆனால் பக்ரீத் பண்டிகை காரணமாக விசாரணைக்கு ஆஜராக அவர் காலஅவகாசம் கேட்டு இருந்தார். இதையடுத்து, ஜமீர் அகமதுகான் விசாரணைக்கு ஆஜராக கோரி ஊழல தடுப்பு படை போலீசார் மீண்டும் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களுக்குள் போலீசார் முன்பு ஆஜராகும்படியும், அப்போது சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட பிற ஆவணங்களை தாக்கல் செய்யும்படியும் ஜமீர் அகமதுகானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story