நூ வன்முறை: குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்.. ஆரவல்லி மலையில் நடந்த அதிரடி வேட்டை
ஏராளமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆமிரின் தலைக்கு போலீசார் ரூ.25,000 வெகுமதி அறிவித்திருந்தனர்.
நூ,
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் அருகில் உள்ள மாநிலங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிரமாக கண்காணித்து, வன்முறை பரவாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவ்வகையில், வன்முறை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆமிர் என்ற நபரை குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். திதாரா கிராமத்தைச் சேர்ந்த அவர் தனது ஆதரவாளர்களுடன், ஆரவல்லி மலைப்பகுதியில் டாவுரு அருகே பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு போலீசார் சென்றுள்ளனர்.
அப்போது போலீசாரை நோக்கி ஆமிர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளார். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஆமிரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காலில் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்னதாக ஏராளமான குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆமிரின் தலைக்கு போலீசார் ரூ.25,000 வெகுமதி அறிவித்திருந்தனர்.
மேலும் சில குற்றவாளிகளும் ஆரவல்லி மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
நூ வன்முறை தொடர்பாக 61 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, இதுவரை 280 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.