'டெல்லிக்கு சென்று போராடுங்கள்' - போராட்டக்காரர்களுக்கு மம்தா வேண்டுகோள்


டெல்லிக்கு சென்று போராடுங்கள் - போராட்டக்காரர்களுக்கு மம்தா வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Jun 2022 12:52 PM GMT (Updated: 9 Jun 2022 3:29 PM GMT)

டெல்லிக்கு சென்று போராடுங்கள் என்று போராட்டக்காரர்களுக்கு மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொல்கத்தா,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் போது இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து விவாதத்தில் பங்கேற்ற நபர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த கருத்தை தொடர்ந்து பேசிய நுபுர் சர்மா, இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடந்து நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. பாஜகவை சேர்ந்த நவீன் ஜீண்டாலையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியது. நுபுர் சர்மா, நவீன் ஜீண்டால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் சில பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது.

அந்த வகையில், நுபுர் சர்மா, நவீன் ஜீண்டாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்காள மாநிலம் ஹவ்ரா மாவட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டையர்களை தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், இன்று காலைமுதல் சில பகுதிகளில் சாலை மறியல்கள் நடைபெறுவதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்குவங்காளத்தில் இந்த சம்பவம் நடைபெறாததால் பொதுமக்கள் சார்பில் போராட்டத்தை கைவிடும்படி போராட்டக்காரர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். டெல்லிக்கு சென்று அங்கு போராடுங்கள். பாஜக அரசு எங்கு உள்ளதோ அங்கு சென்று போராடுங்கள். உத்தரபிரதேசம், உத்தரபிரதேசம் சென்று போராடுங்கள்' என்றார்.


Next Story