ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிசாவின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்; ஒடிசா முதல்-மந்திரி


ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடிசாவின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன்; ஒடிசா முதல்-மந்திரி
x

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இன்று வருகை தந்துள்ளார்.



புதுடெல்லி,



நாட்டின் 14-வது ஜனாதிபதியாக கடந்த 2017-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார். அவரது பதவி காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. பா.ஜ.க. சார்பில் திரவுபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் களமிறங்கினர்.

வாக்குப்பதிவு முடிவுகள் கடந்த 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில், திரவுபதி முர்மு வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்த நிலையில், நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் டெல்லியில் உள்ள இல்லத்திற்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் இன்று வருகை தந்துள்ளார். அவரை சந்தித்து பேசி விட்டு வெளியே வரும்போது, செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிக்கவே வந்துள்ளேன். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒடிசாவின் மகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மனநிறைவும், கவுரவமும் பெற்றுள்ளேன். நாளை நடைபெறும் அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்பேன் என தெரிவித்து உள்ளார்.


Next Story