முழு அரசு மரியாதையுடன் ஒடிசா மந்திரியின் உடல் தகனம்
ஒடிசாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாசின் உடல் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்தவர், நபா கிஷோர் தாஸ் (வயது 61).
ஜார்சுகுடா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் சரமாரியாக சுட்டார். இதில் படுகாயமடைந்த அவர் புவனேஸ்வர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு மனநல பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
முதல்-மந்திரி அஞ்சலி
கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாசின் உடல் புவனேஸ்வரில் இருந்து நேற்று காலையில் ஜார்சுகுடாவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக, முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷிலால் மற்றும் மாநில மந்திரிகள் கிஷோர் தாசின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
3 நாள் அரசு துக்கம்
இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலையில் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் அவரது உடல் வைக்கப்பட்ட சிதைக்கு அவரது மகன் பிஷால் தாஸ் தீ மூட்டினார்.
முழு அரசு மரியாதையுடன் நடந்த இந்த இறுதிச்சடங்கில் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கிஷோர் தாசின் மரணத்தையொட்டி மாநிலத்தில் 3 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒடிசாவில் பட்டப்பகலில் அரசு நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.
சி.பி.ஐ. விசாரணை தேவை
இந்த நிலையில் மந்திரி கொலை தொடர்பாக ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு எதிராக பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
பா.ஜனதாவை சேர்ந்த மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜயநாராயண் மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மந்திரி கொல்லப்படுவதற்கு ஒரு நாள் முன்புதான் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரி கோபால் தாசுக்கு பணிக்காக துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மந்திரியின் கொலைக்கு பின்னால் பயங்கர சதி இருக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன். மனநல பிரச்சினை இருந்தவருக்கு துப்பாக்கி கொடுத்தது ஏன்?' என கேள்வி எழுப்பினார்.
கொலையை அரங்கேற்றிய குற்றவாளி போலீஸ் துறையை சேர்ந்தவர் என்பதால், மாநில போலீசாரால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறிய அவர், இந்த படுகொலையில் உண்மையை முதல்வர் வெளிப்படுத்த விரும்பினால், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
பதவி விலக வேண்டும்
இதைப்போல இந்த படுகொலையை கடுமையாக கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் பதவி விலக வேண்டும் என சாடியுள்ளது.
இது குறித்து கட்சியின் எம்.எல்.ஏ. சந்தோஷ் சிங் சலுஜா மேலும் கூறுகையில், 'பட்டப்பகலில் மந்திரி ஒருவரே போலீஸ்காரரால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு என ஏதாவது இருக்கிறதா? மந்திரிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலைமை என்ன?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே மந்திரி கொலையில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி கோபால் தாசிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.