ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியான பரிதாபம்


ஒடிசா ரெயில் விபத்து: தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியான பரிதாபம்
x

ஒடிசா ரெயில் விபத்தில் தமிழ்நாட்டுக்கு வரும் வழியில் 3 சகோதரர்கள் பலியாகினர்.

புவனேஸ்வர்,

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சரணிகாலி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஹரன் காயன் (வயது 40), நிஷிகாந்த் காயன் (35), திபாகர் காயன் (32). இவர்கள் உடன் பிறந்த சகோதரர்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் தங்கி இருந்து சிறுசிறு வேலை செய்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்ற அவர்கள், மீண்டும் தமிழ்நாட்டுக்கு சென்று விவசாய கூலி வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றனர்.

அப்போதுதான், ஒடிசாவில் அந்த ரெயில் விபத்தில் சிக்கியதில் 3 சகோதரர்களும் பலியானார்கள். அந்த செய்தி கேள்விப்பட்டு, கிராமமே சோகமயமானது. மனைவிமார்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஹரன் காயனின் மனைவி நரம்பியல் நோயாளி ஆவார். இனிமேல், அவரது சிகிச்சை என்னவாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தங்கள் குடும்பமே சிதைந்து விட்டதாக ஹரனின் மகன் உருக்கமாக தெரிவித்தான்.

இந்த விபத்தில், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த 12 பேர் பலியானார்கள். 110 பேர் காயம் அடைந்தனர். 44 பேரை காணவில்லை.


Next Story