ஒடிசா ரெயில் விபத்து : தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா? விபத்து நடந்தது எப்படி முழு விவரம் ...!


ஒடிசா ரெயில் விபத்து : தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா? விபத்து நடந்தது எப்படி முழு விவரம் ...!
x
தினத்தந்தி 3 Jun 2023 9:39 AM GMT (Updated: 3 Jun 2023 9:40 AM GMT)

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

புதுடெல்லி

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது.

பெங்களூரு-ஹவுரா ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.

சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 127 கிலோ மீட்டர் வேகத்தில் சரக்கு ரெயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது. அப்போது, சரக்கு ரெயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 261ஆக உயர்ந்து உள்ளது.மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரெயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

முதலில் மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமாரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் பெட்டிகள் கிடந்த தண்டவாளத்தில் கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்புரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா சென்ற அதிவேக ரெயில், கோரமண்டல ரெயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரெயிலும் தடம் புரண்டது.

* முதல்கட்ட விசாரணையில் தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

* சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரசிற்கு முதலில் பச்சை சிக்னல் கொடுத்து விட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டு உள்ளது.

* மெயின் லைனில் சென்று கொண்டு இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சிக்னல் ரத்தானதால் லூப்லைனுக்கு மாறி சரக்கு ரெயில் மீது மோதி உள்ளது.

கோரமண்டல் ரெயில் பட்டிகள் தடம்புரண்டு அவ்வழியே வந்த யஷ்வந்த்பூர் -ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலும் விபத்தில் சிக்கி உள்ளது.

மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு ஒரு பெட்டி மீது இன்னொரு பெட்டி இடித்துக் கொண்டிருந்தன. பல பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தனர். தலைவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணம் உள்ளனர்.

இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கலும், இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், இந்த கோர விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனிதத் தவறா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அனைவருடைய பார்வையிலும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த விபத்து, அதுவும் மூன்று ரெயில்கள் ஒரே இடத்தில் மோதியது எப்படி? என்பதுதான்.

* சரக்கு ரெயில் நின்று கொண்டிருக்கும்போது, அதே ரெயில்பாதையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்தது எப்படி?. இது தொழில்நுட்பக் கோளாறா? அல்லது மனிதத்தவறா?

* பலர் சிக்னல் தவறு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

* ரெயில்வே அமைச்சகம் விபத்துகளை தடுப்பதற்கான 'கவாச்' சிஸ்டத்தை செயல்படுத்தி வருகிறது. ரெயில் சிக்னலை தாண்டும்போது, மோதலுக்கான வாய்ப்புகள் இருக்குமெனில் எச்சரிக்கை தகவலை அனுப்பும். அப்போது எதிரே வரும் ரெயிலை அறிந்து டிரைவர் சுதாரித்துக் கொண்டு பிரேக் மூலம் ரெயில்களை நிறுத்த முடியும். இப்படி இருக்கும்போது 3 ரெயில்கள் எப்படி ஒரே இடத்தில் மோதியது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

* விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் சிஸ்டம் இன்னும் செயல்படுத்தவில்லை என ரெயில்வேதுறை செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்று பார்வையிட்ட ரெயில்வேதுறை மந்திரி, விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். விசாரணைக்குப் பின்புதான் முழுத் தகவல் தெரியவரும்.

கவாச் என்பது இந்திய ரெயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும். இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ரெயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.

ரெயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'கவாச்' கருவியாகும். இது கடந்த ஆண்டு செகந்திராபாத் (ஐதராபாத்) ரயில் நிலையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. இதற்காக இயக்கப்பட்ட இரு ரெயில்களில் ஒன்றில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், மற்றொரு ரெயிலில் ரெயில்வே வாரியத் தலைவர் வி.கே. திரிபாதியும் பயணம் செய்தும் காட்டினார்கள்.

தெற்கு மத்திய ரெயில்வேயில் குல்லாகுடா-சிட்கிட்டா ரயில் நிலையங்களுக்கிடையே இந்த பரிசோதனையும் அப்போது மேற்கொள்ளப்பட்டது. அப்போது இரண்டு ரெயில் என்ஜின்கள் எதிரெதிரான திசையில் வருகின்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இந்த என்ஜின்களில் பொருத்தப்பட்ட கவாச் விபத்து தடுப்புக் கருவி தாமாகவே செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பே இரண்டு என்ஜின்களையும் நிறுத்தி விடப்பட்டது

இதே போல் சிவப்பு சமிக்ஞை விளக்கு வரும்போது ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே கவாச் கருவி என்ஜின் செயல்பாட்டை நிறுத்தி அசத்தியது. இணைப்புப் பாதைகள் வரும்போது ரயிலின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைத்தும் காட்டியது. இந்த திட்டத்தை பலரும் பாராட்டினார்கள். 2022-23-இல் 2,000 கி.மீ. ரயில் பாதை கவாச் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்று அப்போது ரயில்வே அமைச்சகம் தெரிவித்து இருந்தது.



Next Story