'பேஸ்புக்' நேரலையில் பயங்கரம்; மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை


பேஸ்புக் நேரலையில் பயங்கரம்; மும்பையில் உத்தவ் தாக்கரே கட்சி நிர்வாகி  சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 9 Feb 2024 6:45 AM IST (Updated: 9 Feb 2024 10:49 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தின் போது முன்னாள் கவுன்சிலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவரும் தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

மும்பையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. வினோத் கோசல்கர். இவரது மகன் அபிசேக். இவர் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்தநிலையில் நேற்று அபிசேக் மும்பை தகிசர் பகுதியில் உள்ள எம்.எச்.பி. காலனி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அலுவலகத்தில் 'பேஸ்புக்' நேரலை விவாதத்தில் சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் கலந்துகொண்டார்.

நேரலை முடிந்து அவர் புறப்பட்ட சமயத்தில் மோரிஸ் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அபிசேக்கை சரமாரியாக சுட்டார். இதில் காயம் அடைந்த அபிசேக் உயிருக்கு போராடினார். இதற்கிடையே, மோரிசும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு 2 பேரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

முன்னாள் கவுன்சிலர் அபிஷேக்கிற்கும், மோரிசுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது. சமீபத்தில் இருவருக்கும் இடையே சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் மோரிஸ் தனது அலுவலகத்தில் நடைபெற்ற புடவை வழங்கும் நிகழ்ச்சிக்காக அபிஷேக்கை அழைத்து திட்டமிட்டு சுட்டுக்கொன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story