'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும் - குஜராத் முதல்-மந்திரி நம்பிக்கை


ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும் - குஜராத் முதல்-மந்திரி நம்பிக்கை
x

கோப்புப்படம்

“மத்திய அரசு கொண்டு வரவுள்ள ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் நிச்சயம் பயன் அளிக்கும்'' என்று குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆமதாபாத்,

தமிழகத்தில் இருந்து குஜராத் சென்றுள்ள பத்திரிகை நிருபர்களுக்கு குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர படேல் காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் மாநிலத்தில் நிதி மேலாண்மை சிறப்பான முறையில் கையாளப்பட்டு வருகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்து வருகிறோம். சமூகத்தில் தேவையானவர்களுக்கு மட்டுமே இலவசங்களை நாங்கள் வழங்கி வருகிறோம். இதனால், நிதி பற்றாக்குறை என்பது எங்களுக்கு கிடையாது.

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக குஜராத் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டால் இத்தகைய இலக்கை நாங்கள் அடைந்து உள்ளோம். நாங்கள் வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தாலும், நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மத்திய அரசு கொண்டுவர உள்ள 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் மாநிலங்களுக்கு பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தில் நான் பிரசாரம் செய்வேனா? என்று கேட்கிறார்கள். தமிழ் பேச தெரியாததால் தேர்தல் பிரசாரத்துக்கு வர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது குஜராத் மாநில தலைமை முதன்மை செயலாளர் கைலாசநாதன், வருவாய்த்துறை செயலாளர் ஸ்வரூப், மேக்சானா மாவட்ட கலெக்டர் நாகராஜன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story