வறட்சியால் வெங்காய சாகுபடி பாதிப்பு: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


வறட்சியால் வெங்காய சாகுபடி பாதிப்பு: விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2023 6:45 PM GMT (Updated: 31 Aug 2023 6:47 PM GMT)

வறட்சியால் வெங்காய சாகுபடி பாதிப்பு அடைந்ததால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிக்கமகளூரு :-

விவசாயி

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா கிரியாபுரா கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது49). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சதீசிற்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில், அவர் வெங்காயம் பயிரிட்டு இருந்தார். இதற்காக வங்கி மற்றும் நண்பர்களிடம் ரூ.2 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை பெய்தது. ஆனால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். மேலும் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்பட்டன.

தற்கொலை

இந்தநிலையில் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்யவில்லை. இதனால் சிக்கமகளூரு மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டது. இதேப்போல், சதீஷ் சாகுபடி செய்த வெங்காய செடிகளும் வறட்சியால் கருகின. இதனால் சதீசிற்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக சதீஷ் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசாமல் இருந்துள்ளார்.

மேலும், மனக்கவலையிலும் அவர் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தோட்டத்தில் உள்ள மரத்தில் சதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கடூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

விசாரணையில், அவர் வறட்சியால் வெங்காய விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாநிலத்தில் வறட்சியால் இந்த ஆண்டு முதல்முறையாக விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story