ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகளுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை


ஜல்லிக்கட்டில் நாட்டுமாடுகளுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
x

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டுமாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

புதுடெல்லி,

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும்' எனவும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 'ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும்' என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் வக்கீல் டி.குமணன் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி வாதிட்டார்.

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், எதிர்மனுதாரர் சேஷன் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவைத்தலைவர் ராஜசேகர், அலங்காநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டது.


Next Story