பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது
x

ANI

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மீண்டும் சோதனை; 8 மாநிலங்களில் மொத்தம் 170 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி:

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பும், அமலாக்கத்துறையும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் செயல்பாடுகளையும், அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் கண்காணித்து வந்தனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்படுவதை அமலாக்கத்துறை உறுதிப்படுத்தியது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை (22-ந்தேதி) நாடுமுழுவதும் 15 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

93 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 109 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரிடமும் டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா முக்கிய நிர்வாகிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு கிடைத்தது.

குறிப்பாக எந்தெந்த இடங்களில் எல்லாம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு ரகசியமாக இயங்கி வருகிறது என்ற தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பேரில் அந்த இடங்களில் எல்லாம் மீண்டும் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று 8 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். நேற்று நள்ளிரவு முதலே பல இடங்களில் இந்த அதிரடி வேட்டை தொடங்கி விட்டது. இன்று அதிகாலையில் 2-ம் கட்ட சோதனை நடப்பது தெரியவந்தது. அசாம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில் நடந்து வரும் சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இன்று காலை டெல்லியில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

கர்நாடகாவில் 45 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அசாம் மாநிலத்தில் 7 பேர் சிக்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். சிலர் உள்ளூர் ஜெயிலில் உடனடியாக அடைக்கப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 6 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை கைது செய்தனர்.

8 மாநிலங்களில் இருந்து மொத்தம் 170 பேர் கைஅது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு நிதி திரட்டியது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். உத்தரபிரதேசத்தில் சரத்பூர், மீரட், சியானா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் சகின்பாத் மற்றும் ஜமியா பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகளும், அதிரடி படை வீரர்களும் ஒருங்கிணைந்து சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த சோதனைகளுக்கு மத்தியில் உள்துறை அமைச்சகத்தில் என்.ஐ.ஏ, அமலக்காத்துறை தலைவர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.


Next Story