மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - மாநில கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு


மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுங்கள் - மாநில கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு
x

மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில கவர்னரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மனு அளித்தனர்.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களுக்கு மேலாக கலவரம் நடந்து வருகிறது. அங்கு நேரில் சென்று பார்வையிட 26 கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த 21 எம்.பி.க்கள் 2 நாள் பயணம் மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த கனிமொழி, தொல்.திருமாவளவன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்று இருந்தனர். நேற்று முன்தினம் அங்கு சென்ற அவர்கள், கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களை சந்தித்து பேசினர். இம்பால், பிஷ்ணுபூர் மாவட்டம் மொய்ரங், சுரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் நிவாரண முகாம்களுக்கு சென்று இரு தரப்பிலும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தனர். கள நிலவரங்களை ஆய்வு செய்தனர்.

கவர்னருடன் சந்திப்பு

இந்நிலையில், மணிப்பூர் மாநில கவர்னர் மாளிகையில் கவர்னர் அனுசுயா உய்கேவை 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் நேற்று சந்தித்தனர். அவரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நிவாரண முகாம்களில் தங்கி இருப்பவர்களை சந்தித்தோம். அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடைந்தோம். இருதரப்பிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால், தனிநபர்கள் நிச்சயமற்ற தன்மையும், வேதனையும் அடைந்துள்ளனர். அதைப்போக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அரசுகள் தோல்வி

இணையதள சேவைக்கான தடை, வதந்தி பரவ துணைபுரிந்துள்ளது. இருதரப்புக்கிடையே அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது. 3 மாதங்களாக கலவரம் நீடிப்பதும், 160 பேர் பலியாகி இருப்பதும், கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தவறி விட்டதையே காட்டுகிறது. பிரதமர் மோடியின் மவுனம் அலட்சியத்தையே காட்டுகிறது.

சட்டம்-ஒழுங்கு நிலை பற்றி கவர்னரும் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்கும். அனைத்து சமூகத்தினரிடையே கோபமும், தனிமைப்படுத்திய உணர்வும் நிலவுகிறது. அதை தாமதமின்றி போக்க வேண்டும்.

படிப்பு பாதிப்பு

மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு பணிகளை உடனே தொடங்க வேண்டும். நிவாரண முகாம்களின் நிலைமை மோசமாக உள்ளது.

குழந்தைகள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதால், அதை சரிசெய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்

பின்னர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்.பி.க்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கவர்னர் எங்கள் கருத்துகளை கேட்டார். அவற்றை ஒப்புக்கொண்டார். வன்முறை குறித்து வேதனை தெரிவித்தார். அனைத்து கட்சி கூட்டம், மணிப்பூருக்கு வந்து இருதரப்பு மக்களிடையே அவநம்பிக்கையை போக்க வேண்டும் என்று கவர்னர் யோசனை தெரிவித்தார். நாங்களும் சம்மதம் தெரிவித்தோம்.

மணிப்பூர் நிலவரம் நாளுக்குநாள் சீரழிந்து வருகிறது. இங்கு பார்த்தவற்றை நாடாளுமன்றத்தில் பேசுவோம். மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்று அவர்கள் கூறினர்.

பின்னர், எம்.பி.க்கள் அனைவரும் டெல்லி திரும்பினர்.


Next Story