காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன-டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு


காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன-டி.கே.சிவக்குமார் குற்றச்சாட்டு
x

காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

பெங்களூரு:-

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்டம்

மழை பற்றாக்குறையாக பெய்யும் காலத்தில் காவிரி பிரச்சினைக்கு மேகதாது திட்டம் தான் தீர்வு. இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழக ஒதுக்கீட்டு நீரை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த விசாரணையின்போது நீதிபதிகள், உங்கள் பங்கு நீரை கொடுக்க தயாராக இருக்கிறார்கள், அதனால் கர்நாடகம் எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் விட்டு விடுங்கள் என்று கூறியுள்ளனர். நீங்கள் எதற்காக தலையிடுகிறீர்கள் என்றும் தமிழக வக்கீல்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த அம்சத்தை மனதில் வைதது பா.ஜனதாவினர் மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக அரசு முதலில் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீர் கேட்டது. நமது அதிகாரிகள் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி மட்டுமே நீர் திறக்க முடியும் என்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கூறினர். அப்போது வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி அந்த ஆணையம் உத்தரவிட்டது.

தலையிட மாட்டோம்

அதன் பிறகு அதை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைத்தன். நல்ல மழை பெய்யும் என்று நாங்கள் எதிா்பார்த்தோம். ஆனால் போதிய மழை பெய்யவில்லை. ஆனாலும் மண்டியா விவசாயிகளுக்கு நாங்கள் தண்ணீர் திறந்துவிட்டோம். அவர்களின் பயிர்களை காப்பாற்றியுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்வதற்கு முன்பு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினோம்.

ஆனால் சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம், கர்நாடக விவசாயிகளின் மனுக்களை தள்ளுபடி செய்துவிட்டு காவிரி ஆணைய உத்தரவை உறுதி செய்தது. ஆணைய உத்தரவில் தலையிட மாட்டோம் என்று தெளிவாக நீதிபதிகள் கூறியுள்ளனர். முன்பு பா.ஜனதா ஆட்சியின்போது தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பதாக அரசே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

பாதயாத்திரை

இதில் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மேகதாது திட்டத்திற்காக பாதயாத்திரை நடத்தினோம். விவசாயிகள் மற்றும் மக்களை காப்பாற்ற எங்கள் அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் எங்கள் அரசு மீது தேவையின்றி குறை சொல்கின்றன. தற்போது மேல்முறையீடு செய்தாலும், காவிரி ஆணையத்தை அணுகுமாறு தான் சுப்ரீம் கோர்ட்டு கூறும். காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.

மண்டியாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். முழு அடைப்பு நடத்துவது வேண்டாம். போராட்டங்கள் நடத்தட்டும். ஆனால் முழு அடைப்பு நடத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் அதை கைவிட வேண்டும். மேகதாது திட்டத்தை செயல்படுத்த நாங்கள் ஏற்பாடுகளை செய்கிறோம். பிரதமர் தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம்.

பேசி தீர்க்கலாம்

இதற்கு முன்பு மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது அவர் காவிரி கூட்டத்தை கூட்டினார். இப்போது சுப்ரீம் கோர்ட்டும், மேகதாது திட்ட விஷயத்தில் கீழ்மட்டத்தில் பேசி தீர்க்கலாம் என்று கூறியுள்ளது. மத்திய அரசு எப்போது தேதி நிர்ணயம் செய்கிறதோ அப்போது நாங்கள் டெல்லி செல்ல தயாராக உள்ளோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story