தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு டி.நரசிப்புராவிலும் நாளை முழுஅடைப்பு


தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு  டி.நரசிப்புராவிலும் நாளை முழுஅடைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவிலும் நாளை (செவ்வாய்க்கிழமை) முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி.நரசிப்புரா

காவிரி விவகாரம்

காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் தீவிர போராட்டம் நடந்து வருகிறது.

குறிப்பாக மண்டியா, மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் மண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தலைநகர் பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டத்துக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது.

அதேபோல், மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை, ராமநகர் மாவட்டம் ராமநகர் நகரம், சென்னப்பட்டணா, பிடதி ஆகிய பகுதிகளிலும் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டி.நரசிப்புராவில் முழுஅடைப்பு

இந்த நிலையில், பெங்களூரு, ராமநகரை தொடர்ந்து மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுனிலும் நாளை முழுஅடைப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுதொடர்பாக நேற்று டி.நரசிப்புராவில் விவசாய சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது டி.நரசிப்புரா டவுனில் முழுஅடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து டி.நரசிப்புராவில் வருகிற 26-ந்தேதி (நாளை) முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்கள், வியாபாரிகள், பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றனர்.


Next Story